Thursday, 27 December 2012

குருவாரம் குருவார்த்தை-8


"ஆளில்லாக் காட்டுக்குள்ளே ஆயிரம்பூ பூக்கிறது யாருமில்லை பார்ப்பதற்கு...அப்புறம் ஏன் பூக்கிறது" என்றொரு நாட்டுப் பாடல் உண்டு. இந்தப் பாடல் உண்மையில் என்ன சொல்கிறது?

இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுகிற போது, யாருமே இல்லாதபோது கூட பூக்கள் படைக்கப்பட்டிருக்கும்.நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் உருவான நிலையிலேயே தாவரங்கள் உருவாகியிருக்கும்..உண்மையில் அவை மனிதர்களுக்காக உருவாகவில்லை. மனிதர்கள் பார்க்க வேண்டுமென்று உருவாகவில்லை. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை உண்டு.ஆலமரம் ஒரு தன்மையைக் கொண்டிருக்கிறது. தாமரைதனக்கென்றொரு சொரூபத்தையும் வாசத்தையும் கொண்டிருக்கிறது. இப்படி தனித்தனி குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் தாவரங்களைக் கொண்டுதான் வனமே உருவானது.

உண்மையில் தாவரங்களுக்குதான் முதலில் குணாதிசயங்களும் தன்மைகளும் உருவாயின. அவற்றிலிருந்துதான் மனிதர்களுக்கு குணாதிசயங்கள் ஏற்பட்டிருக்கும். பல தாவரங்கள் நன்மை மட்டுமே செய்யும். சில தாவரங்கள் நன்மை செய்யாது. சில தாவரங்கள் விஷச்செடிகளாக இருக்கும்.மனிதர்களும் இப்படி பல விதங்களாக உருவானார்கள். மனித குணங்களில் நாம் காணும் ரஜோ குணம்,தமோ குணம், சத்வ குணம் ஆகியவற்றின் வித்து தாவரங்களிலேயே இருப்பதைப் பார்க்கிறோம்.எனவே மனித குணங்களே தாவரங்களிலிருந்து வந்திருக்க வாய்ப்புண்டு.

ஆளில்லாக் காட்டுக்குள்ளே பூ ஏன் பூக்கிறது என்று மனிதன் கேட்கிறான். மனிதனின் இருப்புதான் இருப்பா? மலர்களின் இருப்பை அவன் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லையா? பூக்களுகென்றோர் இருப்பு உண்டு.அவற்றுக்கு இந்தப் பிரபஞ்சத்துடன் உறவாடலும் உண்டு. உரையாடலும் உண்டு.

மனித குலம் இயற்கையின் மிகச்சிறிய பகுதி. மொத்தப் பிரபஞ்சத்தையும் கணக்கிலெடுத்தால் மனிதர்களின் சதவிகிதம் மிகவும் குறைவுதான். ஆனால் மனிதன் தான்தான் இந்தப் பிரபஞ்சம் என்று கருதுகிறான். ஆளில்லாக் காட்டுக்குள்ளே பூக்கள் மிகவும் ஆனந்தமாக இருக்கின்றன. பூக்களின் பாஷை தெரிந்த உயிரினங்களுடன் அவை உரையாடிக் கொண்டும் உறவாடிக் கொண்டும் இருக்கின்றன.

பூக்கள் இயல்பிலேயே தெய்வாம்சம் கொண்டவை.அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே ஆனந்தம் வருகிறதென்றால் அது பூக்களின் இயல்பிலிருக்கிற விசேஷம். தெய்வ காரியங்களுக்குப் பயன்படுவதால் அவை சில சித்திகளுக்கும் அதிபதிகளாக இருக்கின்றன.

பார்க்க ஆளில்லை என்பதால் பூக்கள் உலகத்தில் பூக்க வேண்டியதில்லை என்பது அகங்காரம்.உண்மையில் பூக்களின் உலகத்தில் மனிதர்கள் இல்லை. தன்னுடைய மென்மையும் மேன்மையும் புரியாதவர்களை பூக்கள் பொருட்படுத்துவதில்லை. காட்டில் பூக்கள் ஆனந்தமாகப் பூப்பதே ஆட்கள் அங்கே இல்லாததால்தான். அங்கேயும் அனுமதித்தால் மனிதன் மலர்களின் மரபணுக்களையே மாற்றிவிடுவான். கலப்பினஉருவாக்கம் ஒருவகையில் விஞ்ஞானப் பரிசோதனை.ஆனால் தாவர தர்மங்களுக்குள் தலையிடுகிற முயற்சிதான் அது. ஆளில்லாத காட்டில் பூக்கள் ஆனந்தமாக இருக்கின்றன. சுதந்திரத்தோடும் சுதர்மத்தோடும் இருக்கின்றன.

No comments: