பொருளாதார உலகில் யாருக்கெல்லாம் போட்டி போட முடியவில்லையோ அவர்களெல்லாம் தப்பித்தலுக்காக ஆன்மீகத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து தங்கள் கருத்து ?
ஆன்மீகம் என்பது உயர்ந்த இலட்சியங்களுக்கான பாதை.பொதுவாக ஆன்மீகம் என்பது பிரார்த்தனைகள் பலிப்பதற்கும் சில சித்திகளைப் பெறுவதற்கும்தான் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆன்மீகம் என்பது உயர்ந்த இலட்சியங்களுக்காகவும் தெளிவுக்காகவும் என்பதையே பலரும் உணர்வதில்லை.
பொருளாதாரத் தேடலில் உள்ளவர்களில் ஆன்மீகப் பார்வை உள்ளவர்களும் உண்டு. ஆன்மீக சார்பு இல்லாதவர்களும் உண்டு. ஆன்மீகப் பார்வயுள்ளவர்கள் உலகியல் நிலையிலும் தெளிவாக சிந்திப்பார்கள். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ஆன்மீக சார்பு இல்லாத பலர் உலகியல் வாழ்வில் நேர்மையில்லாமலும் வஞ்சனையோடும் பழிவாங்கும் குணத்தோடும் நடந்து கொள்வார்கள். தோல்வி வந்தால் பதறிப் போவார்கள்.துரதிருஷ்டவசமாக,இவையெல்லாம்தான் உலகியல் வாழ்வுக்கும் பொருளாதார வெற்றிக்குமான தகுதிகள் என்று சிலர் கருதுகிறார்கள். இவர்களால் ஆன்மிகப் பார்வை உள்ளவர்களின் தெளிவையும் நிதானத்தையும் தோல்வியில் கலங்காத மனப்பான்மையையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.எனவே அவர்கள் ஆன்மீகத்தைக் கருவியாகக் கொண்டவர்களால் போட்டி போட முடியாதென்று தவறாக எண்ணுகிறார்கள்.
பழிவாங்கும் உணர்வோ பதட்டமோ இல்லாமல்,தோல்வியில் கலங்கும் எண்ணமோ இல்லாத பக்குவம் ஆன்மீகத்தின் பலம். அவர்களால் நிதானமாக எதையும் அணுக முடியும்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் பொறாமை உணர்வே இல்லாமல்,போட்டிகள் நிறைந்த உலகில் பொறுமையாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே ஆன்மீகத்தைக் கருவியாகக் கொண்டவர்களுக்கு எண்ணங்களிலும் உணர்ச்சியிலும் சமநிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.தப்பித்தல் மனோபாவம் என்பது முற்றிலும் வேறோர் அம்சம்த்தைச் சார்ந்தது.அதுகுறித்து பின்னர் விரிவாகப் பேசுவோம்.
No comments:
Post a Comment