கங்கை மிகவும் புனிதமான நதியாக நம் மரபில் கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக பலவகைகளிலும் மாசடைந்துவருகிறது.இந்நிலையில் கங்கையின் புனிதத்தை தாங்கள் எவ்விதமாக வரையறை செய்கிறீர்கள்?
கங்கையின் தெய்வீக சக்தியும் அதன் சங்கல்பமும் அதே தீவிரத்துடன்தான் உள்ளது.சிறிய மலையொன்றில் தோன்றும் சுனைகூட பல அரிய மூலிகைகளைத் தொட்டுக் கலந்து வருவதால் தூய்மையானதாகவும் தெய்வீகம் மிக்கதாகவே திகழும். கங்கை இமயமலையையும் பல வனங்களையும் கடந்து வருகிறது. அதில் பல மூலிகைகளின் அம்சங்களும், பல சித்தர்கள் மற்றும் முனிவர்களின் ஆசிகளும் நிறைந்துள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி கங்கைதன் இயல்பிலேயே தெய்வீகம் மிக்கது.
கங்கை நடக்கிற பாதையில் சில இடங்களில் கடுமையாக மாசடைந்துள்ளது. ஆனால் ரிஷிகேஷ் ஹரித்துவார் வரையிலும் மிகவும் தூய்மையாகவும் தெளிவாகவும் உள்ளது. சில மனிதர்கள் இயற்கையிடம் நடந்து கொள்ளும் முறை மிகவும் விசித்திரமானது. அறியாமை காரணமாகவோ அல்லது தங்கள் சுயநலம் காரணமாகவோ இயற்கைக்கு உரிய மரியாதையைத் தரத் தவறிவிடுகிறார்கள். எனவே கங்கை சில இடங்களில் மாசடைந்துள்ளது. கங்கைக்கு அருகிலேயே வசிக்க நேர்வதும் வாழ நேர்வதும் ஒரு வரம் என்ற புரிதல் இல்லாவிட்டால் கங்கையை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்னும் அலட்சியப்போக்கு சிலருக்குத் தோன்றலாம். இருப்பதிலேயே அதிகபட்ச சகிப்புணர்வு இயற்கைக்கும் இயற்கை சார்ந்த தெய்வீகத்திற்கும் தான் உள்ளது.
கங்கையில் மூழ்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் தேடி வருகின்றனர். அவர்கள் அதனால் பயனடைவது மட்டுமின்றி ஒரு நீர்நிலையாக மட்டுமே கங்கையைக் கண்டு அதில் தலைமுழுகுபவர்கள் கூட எவ்வித பாதிப்புக்கும் ஆளானதில்லை. அதில் பிணங்கள் மிதக்கின்றன. கழிவுகள் மிதக்கின்றன. இந்த வெளிநிலை மாசுகளைக் கடந்து கங்கையின் புனிதமும் தெய்வீகமும் நிலையாக உள்ளது.எனினும் இயற்கையின் சகிப்புணர்வுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மனிதர்கள் உணர்ந்து இயற்கையின் எந்த அம்சத்தையும் மாசுபடுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வைப் பெறுவது அவசியம்.
No comments:
Post a Comment