நமக்கு நன்மை தரக்கூடிய புதிய பழக்கங்கள் எதையாவது மேற்கொள்ள நினைக்கிறோம்.காலை நடைப்பழக்கத்திலிருந்து யோகா வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொடங்குகையில் உற்சாகமாகத் தொடங்கினாலும் நாட்கள் செல்லச் செல்ல, தொடர்ந்து செய்ய்ய முடிவதில்லை. எங்களையும் அறியாமல் அந்தப் பழக்கம் கைவிட்டுப் போவதை வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையை எப்படி மாற்றுவது?
உங்கள் வாழ்வின் போக்கை இரண்டு அம்சங்கள் வடிவமைக்கின்றன.ஒன்று உங்கள் சம்ஸ்காரங்கள்.மற்றொன்று உங்கள் வாசனைகள். இரண்டும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டுக்குமிடையே சில நுட்பமான வேறுபாடுகள் உண்டு. நீங்கள் சிந்திக்கிற விதம்,உங்களுக்குள் உறுதியாகப் படிந்திருக்கும் சில உந்துதல்கள் எல்லாம் சம்ஸ்காரங்கள்.
சிறிது இடைவெளி விட்டாலும் மீண்டும் உங்களுக்கு மிக எளிதில் கைவருகிற திறமைகள், ஈடுபாடுகள்,புதுப்பிக்கப்படும் உறவுகள் எல்லாம் முந்தைய வாசனைகளின் அடிப்படையில் விளைபவை. இவற்றின் பாதிப்பால் உங்களுக்குள் ஆழமாகப் படிந்துவிட்ட சில வாழ்க்கை முறைகளும் சில எண்ணங்களின் போக்குகளும் நீங்கள் மேற்கொள்ள விரும்புகிற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும்.இதற்கு ஆழமான புரிதலும் அக்கறை மிகுந்த செயல்பாடும் அவசியம்.
இதைத் தாண்டிவர வேண்டுமென்றால் இத்தகைய கர்மவினைகளின் கட்டமைப்பு பற்றி உங்களுக்கு ஆழமான புரிதல் இருப்பதுடன்,முழு விழிப்புணர்வுடன் வேண்டாத பழக்கத்தை மாற்றுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வைராக்கியம்,சிரத்தை இரண்டையும் தாண்டிய தீவிரத்துடன் நீங்கள் இதில் ஈடுபட வேண்டும்.உதாரணமாக, மதியம் தூங்குகிற வழக்கத்தை மாற்ற
விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு தகுந்த மாற்று என்னவென்று சரியாகக் கண்டறிந்து அதில் ஈடுபடுவதன் மூலம் மதியம் உறங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும். அந்த நேரத்தில் ஒரு புத்தகம் படிக்கலாம் என்று நீங்கள் தொடங்கினால் மூளை களைப்படைந்து தூங்கி விடுவீர்கள்.
சிலர் காலை நான்கு மணிக்கு தியானம் செய்யலாம் என்று தொடங்கி பத்து நிமிடங்களில் தூங்கி விடுவார்கள். அவர்களுக்கு தியானம் வராதென்று பொருளல்ல. யோகாவிலோ உடற்பயிற்சியிலோ நாளைத் தொடங்கி பிறகு தியானத்தில் அமரவேண்டும்.
நீங்கள் எதையாவது புதிதாகத் துவங்க முற்படும்போது உங்கள் உள்நிலையிலேயே அதற்கான தடைகள் வருகிறதென்றால், பல வருடங்களாகவோ பல பிறவிகளாகவோ குறிப்பிட்ட வாழ்க்கைமுறை உங்களுக்குள் படிந்து விட்டதாகப் பொருள். இதை உங்கள் விழிப்புணர்வில் கொண்டுவந்து முழு ஈடுபாட்டுடன் மாற்று நடவடிக்கை ஒன்றினைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் அந்தத் தடைகளை நீங்கள் தாண்டிவர முடியும்.
No comments:
Post a Comment