Thursday, 7 February 2013

குருவாரம் குருவார்த்தை-14

அனைத்து  சாதுக்களும்  முனிவர்களும்  கும்பமேளாவில்  கலந்து கொள்வதில்  மிகவும்  முனைப்புடன்  இருக்கிறார்கள். கும்பமேளா
சாதுக்களுக்கான  விழாவா ? ஒரு சராசரி மனிதனைப் பொறுத்தவரை  கும்பமேளாவுக்கான முக்கியத்துவம் என்ன ?



       ஆன்மீகத்தில் நாட்டமுள்ள ஒவ்வொருவருக்குமே  கும்பமேளா  மிகவும்
முக்கியமான வைபவம்.நமது தேசத்தின் நான்கு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில், சில துல்லியமான கணக்குகளின் அடிப்படையில் கும்பமேளா நடத்தப்படுகிறது.



         புனிதம்    மிக்க   நதிகளின்    கரைகளில்     கும்பமேளாக்கள்  நிகழ்கின்றன.
ஹரித்துவாரில் கங்கைக்கரையிலும், நாஸிக்கில் கோதாவரிக்கரையிலும், உஜ்ஜையினியில் ஷிப்ரா நதிக்கரையிலும் அலகாபாத்தில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமமாகும் திரிவேணி நதிக்கரையிலும் கும்பமேளாக்கள் நடைபெறுகின்றன.
       தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது திரண்ட அமுதத்தை எடுத்துக் கொண்டு அசுரர்கள் ஓடிவிட தேவர்கள் அவர்களைத்   துரத்திக் கொண்டு பன்னிரண்டு பகல்களும் பன்னிரண்டு இரவுகளும்  ஓடினார்களாம். அப்போது   நான்கு   இடங்களில் அமுதம் சிந்தியதாகவும் அந்த நான்கு இடங்களில்தான் தற்போது கும்பமேளா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. கும்பமேளா நடக்கும் நாட்களில் அமுதம் இந்தப் புனித நதிகளில் கலப்பதாகவும் ஐதீகம்.
       கும்பமேளாவின் மிக முக்கிய நிகழ்வு, நாகசாதுக்கள் ஊர்வலமாக வந்து
நதிகளில் புனிதநீராடுவதாகும். பல்வேறு மார்க்கங்களையும் தந்திர நெறிகளையும் ஆன்மீக வழிமுறைகளையும் பின்பற்றும் இந்த சாதுக்கள் புனித நீராடுகையில் தங்கள் தவத்தின் பயனை புனித நதிகளுக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஏற்கெனவே புனிதம் மிக்க இந்த நதிகளில் சாதுக்களின் தவபலனும் சங்கமிக்கும்போது அவை மேலும் புனிதமும் சக்தியும் மிக்கவையாகத் திகழ்கின்றன. அதனால்தான் சாதுக்கள் ஸ்நானம் செய்தவுடன் இந்நதிகள்ளில் நீராடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது. கும்பமேளாவின்போது குறிப்பிட்ட நாட்களில்தான் சாது ஸ்நானங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய புனிதயயத்திரைகளையும் புனித நீராடுதல்களையும் மேற்கொள்வதால் ஆத்மசாதகனின் கர்மவினை மூலமாய் இருக்கும் தடைகள் அகன்று உள்நிலைத்தூய்மை ஏற்படுவதோடு,வாழ்விலும் சில முக்கியத் திருப்புமுனைகள் நிகழ்கின்றன.
        கும்பமேளாவில் பல வகைகள் உண்டு. அர்த்த கும்பமேளா, பூர்ண கும்பமேளா, மஹா கும்ப மேளா, மஹா மேளா என்னும் பலவகைப்பட்ட
கும்பமேளாக்களில் தற்போது அலகாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மஹா கும்பமேளா ஆகும்.

No comments: