யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபடும்போது சில சித்திகள் கிடைக்கும் என்கிறார்கள். இந்த சித்திகளுக்கு அதிக முக்கியத்துவம்தரலாமா ? சித்திகளால் முக்தி கிடைக்குமா ?
நீங்கள் ஆன்மீகப் பாதையில் செல்கிறீர்கள் என்றால், அது குறிப்பிட்ட திசைநோக்கி செல்லும் பயணம் போன்றது. போகிற பாதையில் சில கைகாட்டி மரங்கள் தென்படும். எவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பீர்கள் என்பதை உணர்த்தும் மைல்கற்கள் இருக்கும். இவையெல்லாம், நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்தும் அடையாளங்கள். சித்திகளும் அத்தகைய அடையாளங்கள்தான். ஆன்மீகப் பாதையில் சில எல்லைகளைக் கடக்கையில் சில சித்திகள் கிடைப்பது இயற்கை. இது மிகவும் பரந்துபட்ட ஒரு விஷயம். இது பரந்துபட்டது என்று நான் சொல்லக் காரணம், இதைப் பல்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்ள வேண்டும்.
சிலர் உலக வாழ்வில் சில நன்மைகள் பெறுவதற்காக ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். சிலருக்கு செல்வவளம் தேவையாய் இருக்கிறது. சிலருக்கு ஆரோக்கியம் தேவைப்படுகிறது. சிலருக்கு மன அமைதி தேவைப்படுகிறது. இவற்றுக்கென்றே சில ஆத்மசாதனைகளை மேற்கொள்கிறார்கள். அவற்றை அவர்கள் முறையாக மேற்கொள்ளும்போது ,அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்த ஆசீர்வாதமே சில சித்திகளாய் உருவாகின்றன. இது சித்திகள் பற்றிய ஒரு மேலோட்டமான அம்சம் மட்டும்தான். ஒரு புரிதலுக்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஆனால் ஆன்மீகத்தையே உச்சபட்ச நோக்கமாகக் கொண்டவர்களுக்கு உலக வாழ்க்கை சார்ந்த விருப்பங்கள் இல்லை. அவர்களின் இலக்கு ஆன்மீகம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்துடன் ஒன்றாவதையோ, தங்கள் இஷ்ட தெய்வத்துடன் சங்கமிப்பதையோ அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் சில எல்லைகளைக் கடந்து செல்கையில் சில சித்திகளை அடைகிறார்கள். சிலருக்கு உள்ளுணர்வு பலப்படும். சிலருக்கு வாக்கு சித்திக்கும். அவர்கள் சொல்வதெல்லாம் பலிக்கும். சிலருக்கு உணவு உண்ணத் தேவையிருக்காது. இத்தகைய ஆரம்ப நிலை சித்திகளிலிருந்து அஷடமாசித்திகள் வரை ஓர் ஆத்ம சாதகருக்குக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
உலக வாழ்வில் உள்ள ஒரு மனிதருக்கு இத்தகைய சித்திகள் பிரமிப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தையே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒருவர், இத்தகைய சித்திகளில் ஈடுபாடு கொள்ளத் தொடங்குவாரென்றால் அவருடைய நோக்கம் திசைதிரும்ப வாய்ப்புகள் உண்டு.அவரைச் சுற்றி அதிசயங்கள் நிகழ்கையில்,அனைவரும் அவரைக் கொண்டாடுகையில் அவர் தன்னைக் கடவுளாகக் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவருடைய ஆத்ம சாதனையின் சங்கல்பம் நீர்த்துப் போவதோடு அவர் தன் பாதையையே தவற விடவும் வாய்ப்பிருக்கிறது.
இதையும் தாண்டி சித்திகள் ஒருவருக்கு ஏற்படும்போது அவருக்கும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அதனால் சில நன்மைகள் ஏற்படக் கூடும். உதாரணமாக இந்த சமூகத்தை அவர் ஆசீர்வதித்தால் அதனால் சில நன்மைகள் நிகழும். கிரியைகள் மூலமாகவோ, பக்தி மூலமாகவோ, தீவிரமான தவத்தின் மூலமாகவோ மந்திர தியானத்தின் மூலமாகவோ இஷ்ட தெய்வ வழிபாடு மூலமாகவோ இத்தகைய சித்திகளை அடையலாம். இந்த சித்திகளை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி, தன்னலமில்லாமல் ஒருவர் சமூக மேன்மைக்காக அதைப் பயன்படுத்துவார் என்றால் அது மிகவும் அற்புதமான விஷயம்.
No comments:
Post a Comment