மனிதர்கள் பலர் வெவ்வேறு விதமான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்
அவற்றுக்கும் தங்கள் சமயங்களுக்கும்சம்பந்தம் இருப்பதாய் நினைக்கிறார்கள். மூடநம்பிக்கைகளுக்கும்
ஆன்மீகத்துக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?
இப்போது
நீங்கள் ஒரு விஷயத்தை விவாதிக்க மூன்று அம்சங்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மூடநம்பிக்கை, சமயம், ஆன்மீகம்.
இப்போது நான்காவதாய் இன்னோர் அம்சத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். அதுதான் சமூகப்
பழக்க வழக்கங்கள். உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு சமூகங்களில் விதம்விதமான
மூடநம்பிக்கைகள் முளைவிடுகின்றன. எல்லா நம்பிக்கைகளுக்கும் சமூகம்தான் விளைநிலம். அங்கே
குறிப்பிட்டவொரு சமயம் செல்வாக்குடன் இருந்தால் அந்த சமயத்துடன் அந்த நம்பிக்கை
தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. பின்னர் மனிதர்கள் தங்களின் மனக்கோணல்களுக்கு
ஆன்மீகச் சாயம் பூச முற்பட்டனர். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதுபோல் ஒரு
பிம்பம் உருவானது இப்படித்தான் நீங்கள் சீனாவுக்குச் சென்றால், இரவில் கைகால் நகங்களை வெட்டுவது தீய ஆவிகளை ஈர்க்கும்
செயல் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. அதுமட்டுமல்ல. புதியவர் ஒருவர் சீனா சென்றால்
நூடுல்ஸ் சாப்பிட மிகவும் சிரமப்படுவார். ஏனெனில் சூப்பில் நூடுல்ஸ் எவ்வளவு
நீளமாக இருக்கிறதோ, ஆயுளும் அத்தனை நீளம் என்று நம்புகிறார்கள். ஆயுள்
நீளும் என்கிர நம்பிக்கையில் நீளமான நூடுல்ஸ் சாப்பிட்டு ஒருவர் தொண்டை அடைபட்டு
சாகவும் வாய்ப்புண்டு. இவையெல்லாம் அந்தந்த சமூகங்களில் நிலவுகிற மூடநம்பிக்கைகள்.
காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் அரைவேக்காட்டுத்தனமான மூடத்தனங்களுக்கு சமயச்
சார்பை ஏற்றி ஆன்மீக முலாம் பூச முற்பட்டார்கள்.
முயலின்
கால் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பது அமெரிக்காவில் நிலவும் மூடநம்பிக்கைகளில்
ஒன்று. எனவே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று திசைபேதமில்லாமல் மூடநம்பிக்கைகள்
உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன. இவற்றுக்கு சமயங்களுடனோ ஆன்மீகத்துடனோ எந்த
சம்பந்தமும் இல்லை. சமூகத்தில் நிலவுகிற தவறான நம்பிக்கைகளை சமயத்தோடும் ஆன்மீகத்தோடும்
சம்பந்தப்படுத்தி அபத்தமாகப் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் ஜாதீய
வேறுபாடுகளும் பெண்ணடிமைத்தனமும். முன்னொரு காலத்தில் பெண்கள் வேள்விகள்
புரிந்தனர். காலப்போக்கில் அந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமூகத்தின்
தவறான புரிதல்கள் சமய சம்பந்தம் கொண்டவையாகவும் ஆன்மீக சம்பந்தம் கொண்டவையாகவும்
புரிந்து கொள்ளப்பட்டன. இவற்றில் தீயவை மாறி நல்லவை நிகழ்ந்ததை விட நல்லவை உருமாறி
தீய நம்பிக்கைகளானதே அதிகம். யாரேனும் ஒருவர் சமயத்தின் பெயரால் மற்றவர்களின் உயிர்களைப் பறிப்பது பாவமல்ல
என்றும் அது தங்கள் சமயத்துக்காக செய்ய வேண்டிய கடமையென்றும் நினைக்கலாம்.
இதற்கும் அவர்கள் சமயத்திற்கும் தொடர்பே இருக்காது. ஆனால் இது உலக அளவில் பெரும்
பாதிப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே ஒருவர் தீவிரவாதத்தில்
சமயத்தின் பெயரால் ஈடுபடுவார் என்றால் அதுவும் ஒருவிதமான
மூடநம்பிக்கைதான்.ஆன்மீகம் எப்போதுமே உயிர்களை இயற்கையுடன் ஒன்றுபடுத்தி
நல்லிணக்கத்தை உருவாக்க முற்படுகிறது. அடுத்தவர்கள் மீது பரிவும் அக்கறையும் கொள்ள
கற்றுத் தருகிறது.சக உயிர்கள்மீது காட்டும் அன்பின் மகிமையை உணர்த்துகிறது.
ஒரு
குழந்தை பசியால் வாடுகிறபோது அந்த வாட்டத்துடன் நீங்கள் உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள்.இது
பிரபஞ்சம் முழுவதையும் உங்களில் ஒன்றாகக் காண்பதற்கான சாத்தியங்களின் ஒருகூறுதான்.
உள்நோக்கம் ஏதுமின்றி உங்களால் புன்னகைக்க முடிகிறதென்றால் இந்தப் பிரபஞ்சத்தின்
இயக்கத்துடன் நீங்கள் பொருந்திப் போவதாகவே பொருள்.
எனவே
மூடத்தனமான நம்பிக்கைகள் சமயத்துடனோ ஆன்மீகத்துடனோ எவ்விதத்திலும்
சம்பந்தமில்லாதவை. அவற்றுக்கு யாரேனும் ஆன்மீகச் சாயம் பூச முற்படுவார்களென்றால்
தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதுடன் வாழ்வின் சாரத்தையும் இழக்கிறார்கள் என்றே
பொருள்.
No comments:
Post a Comment