Thursday, 23 May 2013

குருவாரம் குருவார்த்தை-29



குழந்தையைப் பெரும்பாலும் கடவுளுடன் ஒப்பிடுவார்கள். இது ஏனென்றால் குழந்தையின் எல்லாச் செய்கைகளுமே மிகவும் வெளிப்படையாய் இருக்கின்றன. நேர்மை, விளையாட்டுத்தனம், அன்பு, சந்தோஷம் ஆகியவற்றின் வடிவமாகவே ஒரு குழந்தை திகழ்கிறது. அதற்கு சுய அடையாளமோ அகங்காரமோ பெரிதாக
இல்லை. எண்ணிக் கிடக்க எதிர்காலத் திட்டங்களோ ஏங்கியழ கடந்த காலம் குறித்த கவலைகளோ இல்லை.

அது நிகழும் கணத்தை முழுமையாக உள்வாங்கி அனுபவிக்கிறது. உள்ளே ஒன்றை நினைத்துக் கொண்டு  வெளியே வேறுவிதமாக செயல்பட குழந்தைக்கு ஒருபோதும் தெரியாது. குழந்தைக்கு மறைமுகத் திட்டங்கள் ஏதுமில்லை. அழும்போது கூட வெளிப்படையாக அழுகிறது. பின்னர் தன் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. 

இதே குழந்தை வளர்ந்து வரும்போது என்ன நடக்கிறது?சமூகம் கொடுத்த சுய அடையாளம், குடும்பம் கொடுத்த சுய அடையாளம்,கல்வி கொடுத்த சுய அடையாளம் ஆகியவை குழந்தையின் மனப்பாங்கில் 90%ம் அதற்கு அதிகமாகவும் ஆக்ரமித்துக் கொள்கிறது. இந்த அடையாளங்கள் ஏதுமில்லாத குழந்தைப்பருவம் அத்தனை அற்புதமாய் இருந்தது. ஆனால்வளர்ந்த பிறகு,வெளியிலிருந்து அந்த மனிதர் எத்தனையோ விஷயங்களை உள்வாங்கிக் கொள்கிறார். சில விஷயங்கள் நல்லவையாக இருக்கின்றன. சில விஷயங்கள் வேண்டாதவையாக இருக்கின்றன. சில தன்மைகள் மிகவும் அவசியமானவையாய் இருக்கின்றன. சிலவோ வெறுமனே அகங்காரத்தை வளர்த்து விடுகின்றன.

சமூக அடையாளங்களையும் பிற அடையாளங்களையும் நீங்கள் சேகரிக்கத் தொடங்கும்போது, அவை சில அழுத்தங்களையும் சிக்கல்களையும் கூடவே கொண்டு வருகின்றன. அவை உங்கள் இயல்பான தன்மையிலிருந்து உங்களைத் தள்ளிவைத்து, இல்லாத ஒரு தன்மையை உங்களுக்குக் கற்பிக்கின்றன. அன்பும் பரிவும் எப்போதுமே மனித மனத்தின் முக்கியமான தன்மைகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் உங்களிடம் வெளிப்புற பாதிப்புகள் ஏற்படுகிற காரணத்தால், உங்கள் இயல்பான தன்மையே உங்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டது.

உங்களுக்குள் இருக்கிற மனிதத்தன்மை, ஏழைகளுக்குத் தருமாறும் எல்லோரையும் நேசிக்குமாறும் உங்களுக்குச் சொல்கிறது. ஆனால் இந்த சமூகத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களோ, ஏன் கொடுக்க வேண்டும்? ஏன் நேசிக்க வேண்டும்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறது. எனவே உள்நிலையில் அன்பும் மனிதநேயமும் தூய்மையாகத் திகழ,சமூகத்தின் தவறான கற்பிதங்கள் பாளம் பாளமாகப் படிந்து  நீங்கள் யாரென்பதையே இந்த உலகம் மறக்கச் செய்து விடுகிறது.

மற்ற உயிரினங்கள் தங்கள் உள்நிலை உந்துதலின்படி வாழ்கின்றன. மனிதமனம்தான் அங்குமிங்கும் அலைபாய்ந்து தடுமாறுகிறது. மனிதனுக்கு ஆறாம் அறிவு ஒரு வரமாக வழங்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் அதுவே சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மற்ற உயிரினங்களை அவற்றின் உந்துதல்களே வழிநடத்துவதால் அவை சமூகத்திலிருந்து கூடுதலாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் மனிதர்களுக்கு தேர்வு செய்யும் உரிமை என்றும் உண்டு. ஆறாம் அரிவைப் பயன்படுத்தி அவர்கள் சுயநலத்தை வளர்த்துக் கொள்ளலாம், அல்லது அன்பை வளர்த்துக் கொள்ளலாம். விழிப்புணர்வு என்னும் மகத்தான கருவியைப் பயன்படுத்தி, மனிதர்கள் சமூக அடையாளங்களைக் கடந்து போக வேண்டுமே தவிர, அவற்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

எனவே உங்கள் விழிப்புணர்வை ஆனந்தத்தை நோக்கிய பாதையாகவும், சிரிப்புக்கும் நகைப்புக்குமான பாதையாகவும் குழந்தை எதையெல்லாம் செய்யுமோ அதையெல்லாம் செய்வதற்கான தூண்டுகோலாகவும் பயன்படுத்துங்கள். உங்கள் உள்தன்மையுடன் தொடர்பிலிருங்கள். உங்கள் போலித்தனமான அடையாளங்களிலிருந்து உங்களைத் துண்டித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு முழுநாள் பயிற்சியாக மேற்கொண்டால், அமைதியென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும்.

எனவே எவ்வித உள்நோக்கமுமில்லாமல் புன்னகையுங்கள். எதிர்பார்ப்பில்லாமல் நேசியுங்கள். கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்காகவே கொடுங்கள். உங்கள் அகங்காரத்தைக் கடந்து சென்று, அங்கே நின்று பார்த்தால் இந்த வாழ்க்கை எத்தனை அழகானதென்று உங்களுக்குத் தெரியும்

No comments: