குருவாரம் குருவார்த்தை-31
குழந்தைகள் குறித்தும் வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை குறித்தும் சமீபத்தில் பேசினீர்கள். தங்கள் ஆன்மீக வாழ்க்கை, குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி விட்டது.தங்களிடம் இருந்த குழந்தைத்தனம், அன்மீகத்தில் வளர்வதற்குத் துணையாக இருந்ததா?
குழந்தைப் பருவத்தின் இலக்கணமே விளையாட்டுத்தனம்தான். அதுவே குழந்தைகளின் இயல்பு.அவர்கள் தேடும் அதிகபட்ச சுதந்திரமும்,அந்தக் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்துவதுதான்.அவர்களைக் கட்டுப்படுத்தியோ, குழந்தைத்தனம் வெளிப்படாமல் அழுத்திவைக்கவோ செய்தால், பிற்காலத்தில் அவர்கள் மன அழுத்தம்,பாதுகாப்பின்றி உணர்தல் போன்ற மனச்சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.பொதுவாகவே ஒரு மனிதரின் வாழ்வில் மிக அழகிய பருவம்,குழந்தைப் பருவம்தான்.
எவ்வளவு சிக்கலான சூழ்நிலைகள் இருந்தாலும் குழந்தைகளால் குழந்தைகளாகவே இருக்க முடியும். பெரியவர்கள் நிலை அப்படியல்ல. அவர்கள் வாழ்வில் சில சிக்கல்களை உணர்ந்தால் அந்த இடத்திலேயே சிக்கிக் கொள்வார்கள். சில வலிகளை உணர்ந்தால் வலியாகவே மாறிவிடுவார்கள். குழந்தையாக இருந்தபோது நான் மிகவும் விளையாட்டுத்தனமாக இருந்தேன். என்னில் இருந்த ஆன்மீகமலர்ச்சி வெளிப்பட்டபோது, என் பெற்றோர்களுக்கும் சரி, என்னைப் பார்க்க வந்தவர்களுக்கும் சரி, என்குழந்தைத்தனத்தை சமாளிப்பதே பெரிய சவாலாகி விட்டது. ஏனென்றால், மனிதர்களின் பொதுப்புத்தியில் ஆன்மீகம் என்றால் இறுக்கமாக இருக்க வேண்டும் என்றோர் எண்ணம் படிந்து விட்டது. என்னைக் காணவருபவர்களும் பெரும்பாலும் இறுக்கமாகத்தான் இருப்பார்கள். இது என் இயல்புக்கு முற்றிலும் முரணாக இருந்ததால் இறுக்கமான மனிதர்களை எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் நான் சௌகரியமாக உணரவில்லை. ஒருமுறை என்னைக் காண வந்திருந்தவர்களில் ஒரு குழுவினர் மிக மிக இறுக்கமாக இருப்பதை உணர்ந்து அவர்களை சந்திப்பதையே தவிர்த்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்களிடம் வெளிப்படக்கூடிய விதம்விதமான உணர்ச்சிகளை நான் எதிர்கொள்ள முடிந்தது. என்னைக் காண வந்தவர்காள் தங்களுக்குள் இருந்த உணர்ச்சிகளை எவ்விதத் திரையுமின்றி வெளிப்படுத்தினர். கோபம், அச்சம், பொறாமை என்று எந்த குணங்களுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்தாலும் அந்தக் குணம் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது.இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று,அவர்கள் தங்கள் சிக்கலுக்குத் தீர்வு தேடி வந்தார்கள். இன்னொன்று நான் குழந்தையாக இருந்ததால் அவர்களால் எவ்வித மனத்தடையுமின்றித் தங்களை வெளிப்படுத்த முடிந்தது. நானும் அவர்கள் சொல்வதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் வளர்ந்த பிறகு என்னைக் காண வருபவர்களுக்கு தங்களை வெளிப்படுத்துவதில் மெல்லிய மனத்தடை உருவாகிவிட்டது. எனவே பார்த்துப் பார்த்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள், என்னைச் சுற்றியிருந்தவர்கள் என் குழந்தைத்தனத்தையே ஒரு சிக்கல் என்று உணர்ந்தாலும் கூட அந்த இயல்பை நான் தக்கவைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அந்தக் குழந்தைத்தனம் என் ஆன்மீகத்திற்குப் பெரிதும் துணையாக இருந்தது..அதேநேரம்,குழந்தைப்பருவத்தில் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்த விடாமல் அழுத்தி வைத்தால் என்ன நிகழும் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம்.அதற்கு இரண்டு விதமான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஒன்று, அவர்கள் தீவிரமான மன அழுத்தங்களுக்கு ஆளாகலாம். அல்லது, அவர்கள் வாழ்வின் பிற்காலத்தில் குழந்தைத்தனத்தின் முழு வெளிப்பாடாகவே தங்களை உருவாக்கிக் கொள்ள எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில் அவர்கள் அந்த இயல்பையே பெரிதும் விரும்பியிருப்பார்கள். எனவே அந்தத் தன்மையிலேயே இருப்பது என்கிற முடிவுக்கு வருவார்கள். குழந்தைத்தனம் என்பது ஆன்மீகத்தின் முக்கிய அம்சம். "சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே" என்பது அருளாளர் வாக்கு
No comments:
Post a Comment