கடந்த வாரம்
பாம்புகள் பற்றிப் பேசும்போது அவற்றின் ஆன்மீகப்
பரிமாணத்திற்கு வேறு சில அம்சங்களும் உண்டென்று சொல்லியிருந்தீர்களே?
மனித வாழ்வின்
அடிப்படை அம்சம் ஜாதகத்தில் இருக்கிறது. நாகதோஷம் ராகுதோஷம் போன்றவை அவர்கள்
வாழ்வின் போக்கைப் பெரிதும் தீர்மானிக்கின்றன.ராகு கேது ஆகிய கிரகங்கள்
நாகவடிவில் இருப்பதாய் சொல்லப்படுகிறது. இந்த
தோஷங்களிலிருந்து விடுபட அவரவர் வினைப்பயன்களுக்கேற்ப பரிகாரங்களும் உள்ளன. எனவே
நாகங்களுக்கு மனித வாழ்வுடன் உள்ள தொடர்பு பிறவிகள் கடந்த தொடர்பு.
குண்டலினி
சக்தி பாம்பு வடிவில் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே ஒவ்வோர்
உயிருக்குள்ளுமே சக்தி வடிவில் ஒரு பாம்பு இருப்பதாகக் கொள்ளலாம். மனிதனுடன்
பலவகைகளில் பாம்புகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை
என்பதற்கு இவையெல்லாம் ஆதாரங்கள்.
இவற்றையெல்லாம்
விட மனிதனின் உலகியல் வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் வளர்ச்சிக்குப் பெரிதும்
தடையாக இருக்கிற குணங்களில் ஒன்று அச்சம். யோக சூத்திரத்தில் மனிதனின் உள்நிலை
வளர்ச்சியைத் தடுக்கும் ஐந்து கிலேசங்களில் முக்கியமானதாக அச்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பு
அச்சமற்ற தன்மைக்கோர் அடையாளம். ஒரு பெரிய ஜனத்திரளில் பாம்பு புகுந்தால் அந்தக் கூட்டமே சிதறியோடுமே தவிர பாம்பு பயந்து ஓடாது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அச்சமின்மை
ஆன்மீக வளர்ச்சிக்கான ஆதாரங்களில் ஒன்று. அச்சம் எந்த
விதத்தில் தோன்றினாலும் அவற்றின் வேர்களை அறிந்து அகற்றுவதே ஆன்மீக வளர்ச்சிக்கு
கைகொடுக்கும்.
இன்று குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொல்வது பெரும்
குற்றமாகக் கருதப்படுகிறது. நம் ஆன்மீக மரபுடன் பல விதங்களில்
தொடர்பு கொண்டிருக்கும் பாம்புகளைக் கொல்வதும் பெரும் குற்றமாகக் கருதப்பட வேண்டும். இல்லையென்றால் மனிதன் தன் அச்சவுணர்வு காரணமாகவும் விழிப்புணர்வின்மை காரணமாகவும் அரியவகை பாம்புகளை அழித்துவிடும்
அபாயம் இருக்கிறது. எனவே பாம்புகளைப் பற்றி வெறுமனே தகவல்களைத் திரட்டுவதில் ஆர்வம் காட்டுவதை விட இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment