Wednesday, 23 October 2013

குருவாரம் குருவார்த்தை-47

அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தாலாவது அமைதி வருமென்று நினைக்கிறேன்.அதற்கும் வழி தெரியவில்லை. நான் என்ன செய்வது?

நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிறீர்கள். உங்கள் குடும்பம்,நீங்கள் வாழும் சமூகம் என்று ஒவ்வொன்றுக்கும் சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.அந்த பழக்க வழக்கங்களை நீங்கள் பார்த்தும் கேட்டும் அவற்றையே பழகிக் கொள்கிறீர்கள். அவையே உங்கள் அடையாளங்களாகவும் மாறுகின்றன.விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் தூக்கிச் சுமக்கும் அடையாளங்கள் ஒரு பக்கம்.அந்த அடையாளங்களைத் தாண்டி அமைதி வேண்டும் என்று விரும்பும் உங்கள் உள்ளுணர்வு இன்னொரு பக்கம்.



இதில் உங்களுக்கு என்ன குழப்பமென்றால் அமைதி எங்கேயோ இருக்கிறது,அதைத் தேடிப்போக மற்றவற்றை விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அந்த அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது. அது எல்லாவற்றையும் விட்டு தப்பித்துப் போகிற அமைதியல்ல. சமாதியில் போய் அடைகிற அமைதியும் அல்ல.
 
 
உங்களுக்குள்ளேயே இருக்கிற அமைதியுடன் தொடர்பு கொண்டால் இந்தக் குழப்பமும் கலக்கமும் அகன்றுவிடும். இந்த வாழ்க்கை கொஞ்சம் குரூரமாகத்தான் இருக்கும். இதை வாழ்ந்துதான் ஆக வேண்டும்.ஆனால் எந்தவிதமாக வாழ்வது என்பது நிச்சயமாக உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இறுக்கமான முகத்துடன் அழுது புலம்பிக் கொண்டும் வாழலாம்.மாற்ற முடியாததை ஏற்றுக் கொண்டு,இந்தப் பிறவி மீண்டும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்ற புரிதலோடும் வாழலாம்.உங்கள் உள்நிலையில் சூழலோடு பொருந்திப் போகிற தன்மை இருந்தால் இந்த ஊசலாட்டங்களைக் கடந்து வர முடிகிறது.
 
எனக்குத் தெரிந்து நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு அவர்களுக்குப் பிடிக்காத ஒன்றை சொன்னால் கூட அதில் நன்மை இருந்தால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.ஆனால் பலர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் உண்மையைப் பார்க்க மறுக்கிறார்கள். தங்கள் அபிப்பிராயங்களையும் அடையாளங்களையும் இறுகப் பற்றிக் கொண்டு அதுவே சரி என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
 
உள்ளபடியே சத்சங்கம் என்று சொன்னால் உங்கள் தனிப்பட்ட அடையாளங்களையும் அபிப்பிராயங்களையும் கடந்து உண்மையைப் பார்க்கவும் உண்மையுடன் பொருந்திப் பார்க்கவும் உங்களைத் தயார் செய்கிற ஏற்பாடுதான்.இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம்

No comments: