Thursday, 31 October 2013

குருவாரம் குருவார்த்தை​-48


 பண்டிகைகளின் முக்கியத்துவம் என்ன?


பண்டிகைகள் நம் கலாச்சாரத்தின் அடையாளங்கள்.ஆழமான காரணங்களுக்காக அவை உருவாக்கப்பட்டன.ஆனால் அவை பழங்காலங்களில் தோன்றின என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை எதிர்க்கிற போக்கு பலரிடமும் உருவாகிக் கொண்டிருக்கிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் பழங்காலப் பண்டிகைகளையும் வழக்கங்களையும் அவற்றின் ஆழம் புரியாமல் எதிர்ப்பது அறிவின் அடையாளம் என்று சிலர் நினைக்கிறபோதே,இன்னொரு பக்கம், பழங்காலப் பழக்கங்களின் வேர்களை ஆராய்வதற்கு அறிவுலகம் பெரும் தொகையையும் நேரத்தையும் ஒதுக்கி ஆராய்ச்சியும் செய்யும்.
 

 
கலாச்சாரத்தின் அம்சங்களை முழு அதிர்வுடன் வைத்திருந்தாலே அவை எப்படியெல்லாம் நன்மை செய்யும் விதங்களில் உருவாயின என்பதை உணர முடியும். உதாரணமாக ஆயுத பூஜை நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கிறது.ஒருவர் தான் செயும் தொழிலை மட்டுமின்றி அதற்குப் பயன்படும் கருவிகளையும் பெரிதும் மதிக்க வேண்டும்,பூஜிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு அது.விஜயதசமி அறிவுக்கு செய்யப்படும் ஆராதனை.அறிவுக்கான தேடலில் இறங்குவதற்கு உகந்தநாள் என்று அந்தநாள் போற்றப்படுகிறது.கடவுள் இல்லையா இருக்கிறாரா என்கிற தர்க்கத்தில் இறங்குபவர்கள் கூட,ஒருவகையில் அறிவின் பாதையில்,தீவிரத் தேடலில் இறங்குகிறார்கள்.

ஒரு பண்டிகை எந்த தாத்பர்யத்தைக் குறிக்கிறதோ அந்த நாளில் அது குறித்த சிந்தனை மேலோங்கும்.சுதந்திர தினம் என்றால் தேசம் பற்றிய சிந்தனை மேலோங்குகிறது.ஆயுத பூஜையில் ஈடுபடும்போது உங்கள் தொழிலை இன்னும் எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற சிந்தனை உங்களுக்குள் உருவாகும்

அதேநேரம் குடும்ப அளவிலும் உறவுகள் அளவிலும்  சமூக அளவிலும் ஓர் ஒருங்கிணைப்பை பண்டிகைகள் ஏற்படுத்துகின்றன. பண்டிகைகள் நிமித்தமாய் சேர்ந்து உண்ணுதல் கொண்டாடுதல் ஆகியவை நடைபெறுகின்றன.

தீபாவளி நரகாசுரனின் அழிவைக் கொண்டாடுவதாக நம்முடைய கலாச்சாரத்தில் காலங்காலமாகவே இருந்து வருகிறது.அசுரர்கள் வெளியில் மட்டுமல்ல.மனிதர்களுக்கு உள்ளேயும் உண்டு.தனக்குள் இருக்கும் அசுரகுணத்தின் அழிவை மனிதர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதன் தாத்பர்யம் தீபாவளி.

தீபாவளிக் கொண்டாட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. குழந்தைகள் விரும்பி வெடிக்கிற பட்டாசுகள்.மற்றும் தீபங்களை ஏற்றி  வழிபடுதல்.இன்று பட்டாசுகளும் வாண வேடிக்கைகளும் சுற்றுச் சூழலுக்கு நல்லதில்லை.

தீப-ஆவளி என்றாலே தீபங்களை வரிசையாக ஏற்றுவது என்றுதான் பொருள் தீபமேற்றுவதில் இன்னும் அழகான காரணம் உள்ளது. தீமை இருளாகவும் நன்மை ஒளியாகவும் பார்க்கப்படுகிறது.எதிர்மறை எண்ணங்கள் இருளாகவும் நேர்மறை எண்ணங்கள் ஒளியாகவும் பார்க்கப்படுகின்றன.அறியாமை இருளாகவும் ஞானம் ஒளியாகவும் உருவகிக்கப்படுகிறது.மனிதன் இருளிலிருந்து ஒளியை நோக்கிச் சென்றால் அதுவே கொண்டாட்டம். அதுவே தீபாவளி. "தமஸோமா ஜோதிர்கமய'என்பதற்கேற்ப ஒளி மிகுந்த நிலையை அனைவரும் அடைய என் மனப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 


No comments: