ஒரு மனிதரிடம் பழகத் தொடங்கும் முன்னால் அவரை எடை போடுகிறேன்.எடைபோட்டு அவரை கவனிக்கிறபோதுதான்,அவர் பூரணமானவர் இல்லையென்று தெரிகிறது.அப்படி இருப்பவருடன் ஏன் பழக வேண்டுமென்றும் தோன்றுகிறது.இது சரியா?
முழுமையான, பூரணமான இயல்புகள் கொண்ட மனிதர் என்று யாருமே இல்லை. இன்னும் சரியாகச் சொன்னால்,மனிதர்களைப் பொறுத்தவரைமுழுமையை நோக்கிய பயணம் இருக்கிறதே, அது சென்றடையும் இலக்கல்ல.சென்று கொண்டேயிருக்கும் பயணம் மட்டுமே.மனிதர்களை எடைபோடுகிறபோது அவரவர் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே எடைபோடுகிறார்களே தவிர மனிதர்களின் இன்றைய தன்மையை வைத்து எடைபோடுவதில்லை.
உதாரணமாக ஒருவர் உங்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இன்று அவரைப் பார்த்தாலும் உங்கள் மனதில் அதே வெறுப்பு தோன்றுகிறது.உடனே அந்த வெறுப்பின் அடிப்படையில் அவரை எடை போடுகிறீர்கள்.எந்த ஒரு மனிதருக்கும்,எந்த ஒரு சம்பவத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும்.ஆனால் ஒருதலைப் பட்சமாகவே பார்க்கும் போது வெறுப்பு ,அவஸ்தை போன்ற வேண்டாத குணங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.ஒருவரைப் புரிந்து கொள்வதற்காக அவரை எடை போடலாமே தவிர ஓர் எல்லைக்கு மேல் அந்த குணம் உதவாது.
ஆன்மீகத்திலும் எடைபோடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. தங்களுக்கென்று சில முன்முடிவுகளை வைத்துக் கொண்டு அந்த முன்முடிவுகளுக்கேற்ப இருக்கிறார்களா என்று எடைபோடுவார்கள். ஆன்மீகவாதியென்றால் அவர் முகம் இறுக்கமாக இருக்க வேண்டும்.அவர் கண்களில் ஒருவித கோபம் தென்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள்.இப்படி முன்முடிவுகளுடன் வருபவர்களைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும்.
பொதுவாக ஒரு மனிதரை எப்படி எடை போடுவீர்கள்? அவருடைய நடை உடை பாவனை,பேச்சு போன்றவற்றை வைத்து எடை போடுவீர்கள்.அவை சில அபிப்பிராயங்களை உருவாக்குமே தவிர அந்த இயல்புகள் அவர்களிடம் நிலையாய் இருக்கும் இயல்புகள் இல்லை.எனவே உங்களின் எடைபோடுதலும் அதனால் உருவாகும் அபிப்பிராயங்களும் உங்களை எவ்விதத்திலும் உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு போகப் போவதில்லை
எனவே உங்கள் எடைபோடுதலை அடிப்படை நிலையிலேயே நிறுத்துங்கள். உங்கள் வலி,உங்கள் மனநிலை இவற்றின் அடிப்படையில் எழும் முன்முடிவுகளைக் கொண்டு மற்றவர்களை முடிவு செய்யாதீர்கள்.எந்த அளவு தீவிரமாக மற்றவர்களை எடை போடுகிறீர்களோ அந்த அளவு மற்றவர்களைப் பற்றி தவறான அபிப்பிராயங்களையே உருவாக்கிக் கொள்வீர்கள்.உங்கள் மனதை வெளிச்சூழலுக்கும் நீங்கள் எதிர்கொள்கிற மனிதர்களுக்கும் ஏற்ப திறந்த நிலையில் வைத்திருந்தால் அதன்மூலம் வாழ்க்கை உங்களுக்கு பல அற்புதமன விஷயங்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும். மாறாக நீங்கள் எல்லாவாற்றையும் எடைபோட்டுக் கொண்டேயிருப்பது வாழ்க்கையை முழுமையாக உணர உங்களுக்குத் தடையாக இருக்கும்.
1 comment:
வாழ்கையை முழுமையாகப் புரிந்து
நடக்க we will try earnestly.As Guruji has said,we'll try not to judge others&have an open mind. thankyou,for the useful suggestion.
Post a Comment