அர்ப்பணிப்பு என்பது,எதிர்பார்ப்புகள் இல்லாதது.நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றிற்கு உங்களையே அர்ப்பணிக்க நினைத்து விட்டீர்கள் என்றால்,நீங்கள் அதில் வெல்கிறீர்களோ இல்லையோ,வேகமாக முன்னேறுகிறீர்களோ அல்லது மெதுவாகச் செல்கிறீர்களோ,அது பற்றியெல்லாம் கவலையில்லாமல்,அந்தப் பாதையில் இருப்பதே உங்களுக்குப் பரவசம் கொடுக்கும்.
பலருக்கும் தங்கள் இலக்கை சென்றடைவதில் அவ்வளவு விருப்பம் இருக்கிறது.அதுவே அவர்களின் தாகமாகவும் இருக்கிறது.தங்கள் மொத்தக் கனவையும் அதில் செலுத்தியிருப்பார்கள்.கடுமையாக உழைத்தும் இருப்பார்கள்.அந்த இலக்கை எட்டிவிட்டால்,அடுத்தது என்னவென்று யோசிக்கத் தொடங்கி விடுவார்கள்.அடுத்த இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கி விடுவார்கள்.அப்படியானால் இலக்கு என்பது மாறக்கூடியது.ஆனால் அர்ப்பணிப்பு என்பது அப்படியல்ல,
அர்ப்பணிப்பு அப்படியே இருக்கும்.அதற்கு இலக்கொ ஒரு பொருட்டில்லை.நீங்கள் உள்ளபடியே அர்ப்பணிப்புணர்வுடன் இருப்பீர்களென்று சொன்னால் இலக்கை சென்றடைவது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதன் படிநிலைகளில் முழுவதுமாக ஒன்றியிருப்பீர்கள்.
எதிர்பார்ப்பு என்பது உங்களை குறுகிய எல்லைகளுடன் பிணைக்கக் கூடியது.ஆசைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
எனவே ஒரு சாதகர் தன் ஆன்மீகப் பாதையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டுமே தவிர எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளக் கூடாது.எதிர்பார்ப்பு உங்களைப் பிணைத்திருக்கிறபோது நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலேயே உங்களுக்கு வெறுப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.ஆன்மீகத்தில் ஈடுபடும் பலரும் தங்கள் அகங்காரத்தைக் கரைக்க பெரிதும் முயல்கிறார்கள்.அந்த அளவுக்கு அர்ப்பணிப்பும் முக்கியம்.
பலரும் ஆன்மீகத்தில் ஒரு சாதகராக நுழைவதற்கு முன்னர் தங்கள் மார்க்கம் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.இது மிகவும் சரியானது.ஆரோக்கியமானதும் கூட.
ஒரு பாதையில் நுழைவதற்கு முன்னர் அதுபற்றி கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது.ஆனால் உங்கள் அகங்காரமானது கேள்விகளுக்கு உட்படவோ,கையாளப்படவோ,புதிய சூழலுக்குத் தக தன்னை மாற்றிக் கொள்ளவோ அனுமதிக்கவில்லையென்றால் அங்கேதான் சிக்கல் தொடங்குகிறது.அங்கேதான் உங்களை நீங்களே குழப்பிக் கொள்கிறீர்கள்.இந்த நேரத்தில் உங்கள் தெளிவு ஒன்றை உங்களுக்குச் சொல்கிறது.உங்கள் குழப்பங்கள் வேறொன்றைச் சொல்கின்றன.இது போன்ற நேரங்களில் உங்கள் சந்தேகங்களே உங்களை வழிநடத்துகின்றன.
ஆன்மீகத்திலும்,ஒரு குருவை அடைவதிலும் உங்களுக்குத் தீவிரமான தேடல் இருந்திருக்கும்.ஆனால் அதற்கான பாதையை அடைந்த பின்னர் உங்களின் நீண்டகால பழக்கங்களும் மனப்பான்மைகளும் அதனை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடைகளை ஏற்படுத்துகின்றன.
ஒரு குருவின் வழிகாட்டுதலோடு இதனை சரிசெய்யலாம்.ஆனால் உங்கள் தர்க்க ரீதியான புரிதலுக்கும் அனுபவத்திற்கும் இடையில் ஓர் ஒத்திசைவு ஏற்பட சற்றே நேரம் பிடிக்கும்.எனவே இதற்கு மிகவும் எளிமையான வழி, நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையை நேசிப்பதும் முழு அர்ப்பணிப்புணர்வுடன் பயணம் செய்வதுமே ஆகும்.
ஆன்மீகப் பயணம் ஒன்றில் ஈடுபபட்டு விட்டீர்களென்றால் அதே பாதையில் முழுமையாக இருங்கள். முழு அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடுங்கள்.அது எத்தகைய ஆனந்தத்தையும் தெளிவையும் உங்களுக்குத் தரும் என்பதை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அன்பும் மகிழ்ச்சியும்
பாலரிஷி
No comments:
Post a Comment