Thursday, 9 April 2020

அமைதியில் திளைத்திருப்போம்…!! இயற்கையுடன் இசைந்திருப்போம்…!



அச்சத்தின் முடிவு விடுதலை…! அறியாமையின் முடிவு ஞானம்…!

                                     -கொரோனா குறித்து ஸ்ரீ பாலரிஷி அம்மா  அவர்களின் பகிர்வுகள்


வாழ்கையில் - காலம் அதனுடைய வேகத்தை குறைத்து கொண்டிருப்பதை போல் தோன்றுகிறது. எண்ணங்கள் அதன் வேகத்தை குறைத்து கொண்டிருக்கின்றன.
தெரிந்தோ அல்லது தெரியாமலோ மனம் இயல்பாகவே உள்முகமாக திரும்பி வாழ்வின் உண்மையான நோக்கத்தை கண்டறிய முற்பட்டிருக்கிறது.  ஒவ்வொறு சூழலும், வாழ்வில் ஒரு படிப்பினையை கற்றுத்தருகிறது.  

இப்படியான தருணத்தில், உலகளவில் அதிர்ந்து கொண்டிருக்கும் இந்த தொற்று, நமக்கு எதை உணர்த்துகிறது?
இச்சூழல் உயிரணுவின் அடிமட்டத்தில் இருந்து ஒருவரை சிந்திக்க செய்துள்ளது.

வாழ்கை என்பது பொதுவாக வெளிப்புற சூழல்களை நோக்கி ஈர்க்கப்படுவதாகவே இருக்கிறது.

ஆர்வம், இலட்சியம்... ஏதாவது ஆக வேண்டும்  என்கிற தூண்டுதல், அல்லது  பொழுதுபோக்கு  கவனச்சிதறல் போன்ற எண்ணங்கள் வெளிப்புற உலகை சார்ந்திருக்கின்றன. 
மனம் இந்த எண்ணங்களிலேயே மூழ்கியிருக்கிறது இந்த எண்ணங்களிலேயே சுழன்று கொண்டிருக்கிறது. இது முடிவற்ற சுழற்சி. இந்த சுழற்சியில் மனம் தன்னை அறியாமல் இயங்கிய வண்ணம் இருப்பதால் இதனை சராசரியாக  யாராலும் தடுக்க இயலாது.

ஒரு கணத்தில்  ஒரு சிந்தனை- அது தியானமாகிறது
 ஒரு கணத்தில்  ஒரு சிந்தனை-அது தெளிவைத் தருகிறது
ஒரு கணத்தில்  ஒரு சிந்தனை- அது பதிலைத் தருகிறது
ஒரு கணத்தில்   ஒரு சிந்தனை- அது அறிதலைக் கொண்டு வருகிறது

எப்போது ஒரு கணத்தில் ஒரு சிந்தனையில் விழிப்புணர்வு ஏற்படுகிறதோ, அந்த சிந்தனையே நமக்கு உள்நோக்கிய அறிதலை தருகிறது.
ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இந்த சூட்சுமம் தெரிவதில்லை இதனால் ஆயிரக்கணக்கான  எண்ணங்களை மனத்தில் வைத்து  உழன்று கொண்டிருக்கின்றனர்.  அத்தகைய மனம்,  கோபம், விரக்தி, பொறாமை, ஆழ்ந்த ஏங்குதல் போன்ற உணர்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இதனோடு விழிப்புணர்வுயின்மையும் இணைந்திருப்பதால், ஒவ்வொருவரின் எண்ணவோட்டத்தின் தீவிரத்தை பொறுத்து ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு ஏராளமான கவனச்சிதறல்களுடன்  ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
சில தினங்கள் முன்புவரை , வாழ்க்கை எனும் பரபரப்பினால்  நாம் ஆட்கொள்ளப்பட்டிருந்தோம்.  அதனால் நேரம் இல்லாததை போலும் வாழ்கை மிக வேகமாக நகர்வதை  போலும் நமக்கு தெரிந்தது. விரக்தியால், கோபத்தால் நாம் பெரும்பாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்தோம், இது ஒரு மாயை போல உருவாகி ஒருவர் என்ன செய்கிறார் என்கிற ஆழமான விழிப்பேயின்றி அவரை ஓடவும் சுழலவும் செய்தது.

திடீரென வந்த இந்த தொற்று!! உலகை சற்று நிதானம் அடையச்செய்திருக்கிறது… சிறிது ஓய்வு கொள்ள செய்திருக்கிறது.
மொத்த மனித கட்டமைப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆம் உண்மையில் இது அதிர்ச்சி தான். இது மொத்த கட்டமைப்பிற்கும், சமூக வாழ்விற்கும் சவாலாக அமைந்துள்ளது, வாழ்கையில் உண்மையான அர்த்தம் என்ன என்கிற கேள்வியை எழுப்புகிறது. வாழ்க்கையின் உண்மையான மதிப்பு எது என்பதை உணரச் செய்திருக்கிறது.

நேரம் என்பது என்ன? 
உண்மையில் நேரம் என்பது நகர்கிறதா அல்லது நம் மனம் மட்டுமே இங்குமங்கும் அலைகிறதா? 
காலம் என்பது நிலையானது. இதனை “கால ப்ரமானா” என்கிறோம். வாழ்வின் தளத்தில், காலம் என்பது வேகமானதுமல்ல, நிதானமானதும் அல்ல.

நம் மனமும், கவனத்தை சிதறடிக்கிற எண்ணங்களும் நம்மை ஒரு புறத்திலிருந்து மற்றொருபுறத்திற்கு ஓடிக்கொண்டேயிருக்க செய்கிறது. ஆனால் நாம் நேரம் தான் ஓடிக்கொண்டேயிருக்கிறது என்கிற கற்பனையை உருவாக்கி கொண்டோம்.
நேரம் என்பது ஓர் அழகான லயம்.  மிக மிக அழகாய் கடந்து போக கூடியது. இந்த லயத்தோடு நாம் ஒத்திசைந்து செல்ல வேண்டுமெனில் ஒவ்வொருவரும் தன் வேகத்தை குறைத்து கொள்ள வேண்டும்… ஒரு கணத்தில் ஒரு சிந்தனை – அதுவே தியானம்..

வேகத்தை குறையுங்கள், வாழ்வின் மீதான உங்கள் எண்ணத்தை மறுசீரமைப்பு செய்யுங்கள். உண்மையில் நாம் நேரமின்றி தான் இருக்கிறோமா? இதே கேள்வியை நீங்கள் என்னிடம்கேட்டால், “நாம் உண்மையில் உள்நோக்கிய அறிதல் இல்லாமலும், விழிப்புணர்வுமில்லாமலும் தான் இருந்திருக்கிறோம்” என்பேன்.
ஒவ்வொரு சூழலும் பலவித பரிமாணங்களை கொண்டிருக்கின்றன. 

ஒவ்வொரு சூழலும் ஆன்மீக பரிமாணம்,  சமூகப் பரிமாணம் மற்றும் தனிப்பட்ட பரிமாணங்களை கொண்டிருக்கின்றன.

ஒன்றுபட்ட மனித விழிப்புணர்வுடன் நாம் இயற்கையுடன், காற்றுடன், இயற்கையின் அடிஆழத்துடன் மற்றும் அதன் சாரத்துடன் நாம் ஒத்திசைந்து இருக்க வேண்டும்.
ஒன்றுபட்ட  மனங்களின் விழிப்புணர்வுடன், ஆய்ந்து நோக்கி, பணம் வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்து,   உண்மையான மனிதவாழ்வின் சாரத்தை செழிப்புறச் செய்ய வேண்டும்…  
பணம் ஒரு செளகரியம் அவ்வளவே, இப்பணம்  இந்த தொற்று பாதித்த தருணத்தில் உதவியதா? இந்த தொற்றை குணமாக்க  உதவியதா? வாழ்வில் பணத்தின் பங்கென்பது மிக மிக குறுகிய எல்லைக்குட்பட்டது. இது சில செளகரியங்களை நாம் பெற உதவிகரமாக இருக்கும் அவ்வளவு தான்.
வேறு வகையில் சொன்னால், மனிதர்களாக நாம் இன்னும் அதிகான செயலை இந்த வாழ்வில் செய்ய வேண்டியிருக்கிறது. மனிதர்களாக இருப்பதின் சாரம் என்பது அன்பு, தூய்மையான அன்பு, உண்மையான பரம்பொருளை அறிவதற்கான சுய விழிப்புணர்வு. இது நம் புறவாழ்வின் நோக்கத்திற்கு கூடுதல் தொடர்பை கொண்டு வரவும் வழிவகுக்கிறது.

வாழ்கை என்பது கடந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் இடையே இருக்கும் கனவும் அல்ல ஓர் எண்ணமும் அல்ல.
வாழ்கை என்பது இந்த நொடி, இக்கணம். இந்த கணத்தில் நீங்கள் சுவாசிக்கும் மூச்சு காற்று, அந்த மூச்சுக்காற்றுடன் நீங்கள் எந்த எண்ணத்தை மனதிற்குள் செலுத்துகிறீர்கள் என்ற விழிப்புணர்வோடு நகருங்கள். இப்போது நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொறு உள்சுவாசத்திலும் அமைதியை சுவாசியுங்கள்… மென்மையாக மிக மென்மையாக உங்களுக்குள் இருக்கும் அமைதியுடன் ஒத்திசைவு கொள்ளுங்கள்.

பூமிக்கு தன்னை தானே ஆற்றுப்படுத்தி கொள்ளும் தன்மையிருக்கிறது.  

நாம்  “நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்”   ஆகிய பஞ்சபூதங்களால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் நாம் இந்த பூமியின் அங்கமாகிறோம். பூமிக்கு தன்னை தானே குணப்படுத்தி கொள்ள தெரியும். ஒரு மனிதனாக நாம் சுயமாக சீரடைதல் பற்றி பேசுகிற போது,நாம் ஒத்துழைத்தோமெனில், 

நாம்அனுமதித்தோமெனில்  இயற்கையால் இந்த மொத்த உலகையும் குணப்படுத்த இயலும். நாம் ஒரு பார்வையாளராக இருந்தால் மட்டுமே -போதும்.

இந்த செயல்பாட்டை கவனமாக கவனியுங்கள், அதனுடன் ஒத்திசைந்திருங்கள்…. அமைதியுடன் ஒத்திசைவாய் இருங்கள். பரிவுடன் இருங்கள்
உலகம் முழுவதிலும்  ஆன்மீகத்தில் ஒரு நகர்வு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.  
அச்சத்தின் முடிவு என்பது விடுதலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!
அறியாமையின் முடிவு என்பது ஞானம்!


நாம் விளிம்பில் இருக்கிறோம். நாம் இரண்டு வாய்ப்புகளில் தற்போது ஒன்றை தேர்வு செய்யலாம். ஒன்று தொற்றை கண்டு அஞ்சி நிற்கலாம் அல்லது முழு விழிப்புணர்வுடன், பிரார்தனைகளின் லயத்துடன் மற்றும் அமைதியின் அர்த்தத்தில் ஆன்மீக விழிப்புணர்வை நோக்கி நகரலாம்.
மனித வாழ்வு எப்போதுமே ஏராளமான சவால்களை சந்தித்திருக்கிறது. பின் இந்த சூழலையும் நாம் இறைத்துவமான  இயற்கையின் வழிகாட்டுதலுடன் கடப்போம். இயற்கைக்கு செவி சாய்ப்போம்!!

அமைதி கொள்வோம்!! ஒன்றிணைந்து இறை அமைதியுடன் இணைந்திருப்போம் பின் வழிகாட்டுதல்கள் தானாக வெளிப்படும். சீரான நிலை இயல்பாகவே வெளிப்படும்.
இச்சமயம் நாம் யாரும் தொலைவில் இல்லை. இப்போது ஒரு வகையில் நாம் அனைவரும் மிக மிக ஒன்றாக இருக்கிறோம்.

அன்பும் ஆசிகளும்,
ஶ்ரீ பாலரிஷி



குறிப்பு
இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நலனிற்காகவும், வலியின் தீவிரத்திலிருந்து அவர்கள் விடுபடவும், இந்த நோயினை எதிர்கொள்வதற்கான வலிமையை அவர்கள் பெறவும் நாம் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீபத்தை அல்லது ஒரு மெழுகுவர்த்தியை காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு ஒளிரச்செய்வோம். அதனுடன் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான மிருத்யுஞ்சய மந்திரத்தை 108 முறை அல்லது 54 முறை பாராயணம் செய்வோம்.

No comments: