நாம் பல செயல்களைச் செய்யத் திட்டமிடுகிறோம். தொடர்ந்து செயல்பட விடாமல் ஏதோவொன்று தடுக்கிறது. அல்லது இடையிலேயே மனது மாறிவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது ?
உங்கள் எண்ணங்கள் உங்களாலேயே தடைப்படுவதையோ தாமதமாவதையோ உணர்ந்தால், உங்கள் வாழ்வின் ஒழுங்குமுறைகளை சரிபார்க்க வேண்டுமென்று பொருள். உங்கள் வாழ்க்கைமுறை உங்கள் உணவுமுறை போன்றவற்றை நீங்கள் எடைபோட வேண்டும்.
உங்கள் எண்ணங்களை உணர்வு சார்ந்த ஏதேனும் தொந்தரவு செய்கிறதென்றால், அந்தத் தொந்தரவு எங்கே உதயமாகிறது என்பதை
முதலில் பாருங்கள். உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும்
வடிவமைப்பதில் உணவுக்குப் பெரும் பங்குண்டு. உதாரணமாக, திடீரென்று உங்களுக்குக் கோபம் வருகிறதென்றால், முந்தைய நாளோ,
சில நாட்களுக்கு முன்னரோ நீங்கள் உட்கொண்ட உணவுகூட அதற்குக்
காரணமாக இருக்கலாம்.
கோபப்படுதல்,எரிச்சலடைதல், சோம்பலாகஉணர்தல், விரைவில் குழப்பமடைதல் போன்ற விசித்திரமான மனநிலை மாற்றங்கள், அளவுக்கதிகமாக உணவு உட்கொள்வதாலோ , நீங்கள் உட்கொள்ளும் உணவின் தன்மையாலோ கூட இருக்கலாம்.
சிலர் மிக நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள். ஆனனல் அவற்றைத்
தொடர்ந்து செயல்படுத்த மாட்டார்கள். சிலர் நடைப்பயிற்சி தொடங்குவார்கள். இடையிலேயே நிறுத்தி விடுவார்கள். சிலர் யோகா
பயிற்சிகளைத் தொடங்கி,பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள். சிலர் துரித உணவுகளை நிறுத்த நினைப்பார்கள்.நிறுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்களைத்தொடங்கச் செய்தது எது, தடை செய்வது எது என்று ஆராய வேண்டும்.
ஒரு மனிதர் நல்ல செயலொன்றைத் தொடங்குகிறாரென்றால், அது
ஒருவகைத் தெளிவின் விளைவு. அவரே அதை நடைமுறைப்படுத்துவதில் தோற்றுவிடுவதும் உண்டு. சிந்தனைக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நடுவில் பெரும் தடை இருக்கிறது.தாங்கள் மேற்கொண்ட ஒன்றைத் தொடர்வதற்கான உறுதியோ தெளிவோ தம்வசம் இல்லை என்று சிலர் எண்ணுவார்கள். ஆனால் அவர்கள் உணவுப்பழக்கம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.
ஒரு நாளை நீங்கள் உற்சாகமாகத் தொடங்க வேண்டுமென்றால்,
அதற்கு முந்தைய நாள் இரவு உணவைத் திட்டமிடுவதில் அது
தொடங்குகிறது. முன்னதாகவே இரவு உணவவ எடுத்துக் கொள்வதும்,
அந்த உணவில் அதிகமாக பழவகைகளை சேர்த்துக் கொள்வதும் ஒரு
நாளை உற்சாகமாகத் தொடங்க வழிவகுக்கும். தனிமனிதர்களுக்கு எப்படி தனித்தன்மையும் விதம்விதமான எண்ணப் போக்குகளும் உண்டோ அதேபோல,உணவுக்கென்று சில தன்மைகளும் குணாதிசயங்களும் உண்டு.
ஒரு மனிதரின் சிந்தனைப் போக்குக்கேற்ப அவரைநல்லவரென்றும் தீயவரென்றும் சமூகம் வகைபிரிக்கிறது. அதேபோல உங்கள் எண்ண ஓட்டங்களை இடர்ப்படுத்தி திசைமாற்றும் இயல்பு, உணவுக்கும் உண்டு. எனவே,நீங்கள் நினைக்கும் விதம் ஒன்றாகவும் செயல்படும் விதம் ஒன்றாகவும் இருந்தால், உங்கள் உணவுப்பழக்கத்தை கண்காணித்து சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment