Thursday, 18 April 2013

குருவாரம் குருவார்த்தை-24

(TEDex நடத்திய தேசிய மாநாட்டில் பாலரிஷி அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ்வடிவம் கடந்த வாரம் வெளிவந்தது.அதன் தொடர்ச்சி இது.)


இணைந்திருப்பது எப்படி??

உங்கள் உடல் என்னும் கருவியை நீங்கள் சரியான முறையில் கையாளாதபோது, அதன் காரணமாகவே உங்களுக்கு மனச்சலிப்பு தோன்றலாம். பலரும்,தங்களுக்குத் தோன்றும் மனத் தொந்தரவுகளுக்கு தங்கள் உடலும் ஒரு காரணம் என்பது தெரியாது. உடலை சரியாகக் கையாளும்போது உங்கள் மனம் அமைதிபெற அதுவே பல
வகைகளில் துணை புரிகிறது.

அதேபோல பலவிதமான எண்ணச்சுமைகளுடன் உங்கள் மனம் மூச்சு முட்டப் போராடும்போது அதற்குத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதில்லை. இதுபோன்ற நிலைகளில் ஓர் ஒத்திசைவை உருவாக்கும் கருவியாக இருக்க வேண்டிய மனமே, அதனை சீர்குலைக்கிறது.

எல்லோருக்குமே சென்றடைவதற்கான இலக்குகளும் திட்டங்களும் உண்டு. அவை தெளிவான சிந்தனையின் அடிப்படையில் தோன்றியிருந்தால் அவற்றைச் சென்றடைவதற்கான பாதையில் எதிர்கொள்ள நேரும் ஏற்றத்தாழ்வுகள் உங்களை சோர்வடையச் செய்யாது. அந்தத் தடைகளை ஓர் அனுபவமாகக் கொள்வதுடன் நில்லாமல், அந்த அனுபவங்களையே பாடமாக எடுத்துக் கொண்டு மேன்மேலும் முன்னேறுவீர்கள். இந்த அணுகுமுறை உங்களின் எல்லா முயற்சிகளுடனும் உங்களை இணைந்திருக்கச் செய்யும்.

பல சூழ்நிலைகளில், ஒரே நேரத்தில் விதம்விதமான எண்ணங்கள் மனதில் தோன்றி உங்களைத் திணறச் செய்யும். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுபோல், உங்கள் எண்ண ஓட்டங்களின் போக்கிலும் நெரிசல்கள் ஏற்படும். அந்த நேரத்தில் தளர்வு நிலைக்கு வந்து சாய்ந்து கொண்டு, கண்மூடி அமர்ந்து உங்கள் எண்ணங்களை ஒன்று இரண்டு என்று வரிசையாக எண்ணத் தொடங்குங்கள். இப்போது உங்கள் எண்ண ஓட்டங்கள் சீரடையும். எண்ணங்களை உற்றுக் கவனிக்கும்போது எண்ணங்கள் சமநிலையை அடையும்.

அதேபோல மூச்சுப் பயிற்சியும் செய்யலாம். இதைநான் பயிற்சி என்றுகூட நான் குறிப்பிட விரும்பவில்லை. விழிப்புணர்வுடன் சுவாசிக்க வேண்டும். மூச்சு வெளியேறும்போது,வேண்டாத எண்ணங்களையும் சேர்த்து வெளியேற்ற வேண்டும். மீண்டும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.

உங்களுடைய ஆனந்தம் நிலையாக இருக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய நோக்கம் ஒன்றை நோக்கி நீங்கள் செயல்பட வேண்டும். அது உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சமூகத்துக்கும் பயன்தருவதாக இருக்க வேண்டும். பிறருக்கு அதிக அளவு அன்பைத் தரும்போது உங்கள் ஆனந்தம் பெருகுகிறது. யாருக்கு அதிக பரிவு வேண்டுமோ அவர்களுக்கு வழங்கினால் உங்களுக்கு மன அமைதி பெருகுகிறது. சமூக மேன்மைக்காக செய்யப்படும் எதற்கும் ஆன்மீகம் சார்ந்த அர்த்தம் இருப்பதால் அந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஆன்மீக ரீதியான நன்மைகளும் ஏற்படும்.

No comments: