Thursday, 4 July 2013

குருவாரம் குருவார்த்தை-35

 
 இந்த தேசம் சமயம் மற்றும் கலாச்சார சிதைவுகளைக் கண்டு வருகிறது. மனிதகுலத்திற்கெதிராகவும் மகளிருக்கெதிராகவும் பல சம்பவங்கள் நடக்கின்றன. விளைநிலங்கள் சீரழிக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் நானோ பிற நல்ல ஆத்மாக்களோ தேசத்தின் நலனுக்காக எப்படி உழைப்பது?
 
-வெங்கட்ராமன்,சென்னை
 

இந்த சமூகத்தில் பல்வேறு சம்பவங்கள்,பல்வேறு காரணங்களால் நிகழ்கின்றன. சமயத்தையும் கலாச்சாரத்தையும் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அவற்றின் அடிப்படைகள் புரியாமல் அவற்றை சிதைக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள்.அதேபோல பெண்களுக்கெதிரான குற்றங்கள், இன்று வளர்ச்சி என்று கருதப்படும் நவீனயுகத் தீமைகளால் மட்டுமின்றி தமோகுணத்தாலும் நிகழ்கின்றன. விளைநிலங்களின் சீர்குலைவு, மக்களின் சுயநலப்போக்கால் நிகழ்வது. அறியாமையாலும் வாழ்வு குறித்த தெளிவின்மையாலும் இப்படி எத்தனையோ வேண்டாத சம்பவங்கள் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.
 
தர்மங்கள் பரிந்துரைத்த வண்ணம் சரியானவற்றையே செய்து, எளிமையான வாழ்வை வாழ்வது இன்று பலருக்கும் சாத்தியமேயில்லாத விஷயமாகிவிட்டது. இந்த கலாச்சாரத்திலும் சமூகத்திலும் இருந்த பல அற்புதமான அம்சங்கள் உருக்குலைந்து போகின்றன. பலருக்கும் அவர்களின் முதன்மையான காதல் பணத்தின்மீதுதான் என்றாகிவிட்டது. செல்வம் சேர்ப்பதற்கே வாழ்வில் முதலிடம் என்கிற நிலை தோன்றி விட்டது. இந்தப் பணத்தை சேர்ப்பதற்காக குழந்தைப்பருவத்திலிருந்தே சுயநல உணர்வும் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது.
 
அறிவை வளர்க்க வேண்டிய கல்வி கேம்பஸ் இண்டர்வியூவில் முதலிடம் பெறுவதற்கான வழிவகையாகிவிட்டது.இது போன்ற எத்தனையோ முரண்களால் இளைய  தலைமுறை  குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. 
 
அதேநேரம் இப்படியொரு மாயையில் இருக்கிற மனிதர்கள் அந்த  மாயையிலிருந்து  மீண்டு வரவும் காலம் தரப்பட வேண்டும்.பணம் என்பது நிஜம்தான். ஆனால் பணம் ஒன்றே மகிழ்ச்சியையும் அமைதியையும்  தருமென்று  யாரேனும்  கருதினால் அது  மாயை. ஆதிகாலங்களிலிருந்தே இந்த உலகம்  விதம்விதமான  தீமைகளைக்  கண்டு  வந்திருக்கிறது. அந்தத் தீமைக்கெல்லாம் அசுரர்கள் என்றொரு வடிவம் தரப்பட்டது.
 
விஷயம் என்னவென்றால் அப்போதெல்லாம் அசுரர்கள் வாழ அசுரலோகம் என்றோர் இடம் தனியாக இருந்தது. இப்போது அவர்கள் எங்குமிருக்கிறார்கள்,தனியாக அடையாளம்  காண முடியாத அளவு எல்லோருடனும் கலந்திருக்கிறார்கள். தீய விஷயங்களால் சமூகத்தில் ஒருபோதும் அமைதியைத் தர முடியாது. எனவே அது  நீண்டகாலம்  நீடிக்க  முடியாது . ஆனாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற ஆற்றலை அது பெற்றுள்ளது.ஒரு மனிதன் எவ்வளவுதான் தீயவனாக இருந்தாலும்,அவனும் தேடுவது நிம்மதியைத்தான்.அவனுடைய உச்சத்தேடல் அதுதான்.அவன் தேடுகிற முறைகள்  வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.
 
எனவே,ஒருவகையில் சந்தொஷமும் அமைதியும்தான்  எல்லோருக்குமான விருப்பமாய் இருக்கிறது என்பதால் நீங்கள் அது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.புறச்சூழல் எவ்வளவு மோசமாக    இருந்தாலும், நன்மை  தருகிற  காரியங்கள்  நடந்துகொண்டேயிருக்க  வேண்டும்.பரிவு,சேவை,தன்னலமில்லாத உதவி போன்றவற்றுக்கு சமூகத்தில் எப்போதும் இடமிருக்க வேண்டும்.அதர்மத்தின் பாதையில் செல்பவர்கள் சக்தி மிக்கவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள். உண்மையில் தர்மத்தின் பாதையில் செல்பவர்கள் அவர்களை விட ஆயிரம்  மடங்கு  சக்தி  வாய்ந்தவர்கள்.  ஏனெனில் தர்மம்,அமைதி,நற்பண்புகள் போன்றவையே ஆற்றலுக்கும்  சக்திக்குமான ஊற்றுக்கண்கள்.
 
(பாலரிஷி அவர்களிடம் உங்கள் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன. ombalarishi@gmail.com   எனும் மின்னஞ்சலுக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்)

No comments: