பலரும் தாங்கள் விரும்பித் தேடும் உறவுகளாலேயே பின்னர் விரக்தி நிலைக்கு வருகிறார்களே.இது ஏன்?
இந்த விஷயம் பலரின் வாழ்வுக்கும் பொருந்தி வரக்கூடியதுதான்.ஆண்களோ,பெண்களோ தாங்கள் மேற்கொண்ட உறவுகளில் பாதுகாப்பின்மையை உணர இரண்டு காரணங்கள். ஒன்று
இது எனக்கே சொந்தம் என்னும் தன்னுரிமை உணர்வு.இதனால் அவர்களின் அகங்காரம் பெருக்கப்பட்டு பாதுகாப்பின்மையையும் தூண்டுகிறது.உதாரணமாக பெற்றோர் சிலர்,தங்கள் குழந்தைகள் மீது தன்னுரிமை உணர்வை வளர்த்துக் கொள்வார்கள்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.அவர்கள் சொல்வதை குழந்தைகள் கேட்காத போதும்,இவர்கள் விரும்பும் மேற்படிப்பை அவர்கள் மேற்கொள்ளாத போதும்,தங்கள் அகங்காரம் காயப்பட்டதாய் உணர்வார்கள்.
எந்த ஓர் உறவும் அன்பின் அடிப்படையில் உருவாகும் போது உன்னதமானதாய் திகழ்கிறது.ஆனால் மனிதர்கள் சில கணக்கீடுகளின் அடிப்படையில் உறவுகளை உருவாக்குகிறார்கள்.அதனால் ஓர் உறவில் ,ஒன்று இருவரிடையே இடைவெளி மிகவும் அதிகமாக இருக்கிறது. அல்லது,ஒருவருக்கொருவர் மூச்சுத் திணறும் அளவு தலையீடுகள்
இருப்பதாகத் தோன்றுகிறது.
எனவே உறவுகளில் உண்மையான அன்பையும் அமைதியையும் காண்பதற்கு என்ன வழி என்பதை மனிதர்கள் யோசிக்க வேண்டும்.பாதுகாப்பற்ற உணர்வையும் அகங்காரத்தையும் குறைக்க ஒருவர் முயற்சித்து,உண்மையிலேயே அந்த தன்மைகள் குறையும் போது,அன்புக்கும் அமைதிக்கும் இடமிருக்கிறது. இல்லையென்றால்,உறவு என்பது ஒரு கவனத் திருப்பலாக மட்டுமே ஆகிறது.உணவு உண்ணும்போது கவனம் உணவின்பால்திரும்புகிறது.இசை கேட்கும்போது கவனம் இசையின்பால் திரும்புகிறது. பயணத்தின் போதுகவனம் பயணத்தின்பால் திரும்புகிறது.இவையெல்லாம் தற்காலிகமானவையே தவிர ஒரு தீர்வைத் தருவதில்லை.எல்லாமே மாறிவிட்டதுபோல் உணர்வீர்கள்.சற்று நேரத்திலேயே பழைய நிலைக்குத் திரும்புவீர்கள்.
இவை வேண்டாமென்று நான் சொல்லவில்லை.கண்டிப்பாக அவை தேவை.ஒருவகையில் இவை உங்களைத் தூய்மைப்படுத்தவும் செய்யும்.ஆனால் மனிதர்கள் விழிப்புணர்வோடு இவற்றை மேற்கொள்வதில்லை.இந்த கவன மாற்றங்கள் விழிப்புணர்வோடு விரும்பி மேற்கொள்ளப்படுமென்றால்,அவை சூட்சுமமான முறையில் மனிதர்களுக்கு உதவக் கூடும்.ஆனால் விழிப்புணர்வின்றி மேற்கொள்ளப்படும்போது,சிக்கல்களிலிருந்து தப்பிவிட்டது போன்றதொரு பிரமையை ஏற்படுத்துகிறது.
எனவே,அன்பும் அமைதியும் உங்களுக்குத் தேவையென்றால் இந்த திசைதிருப்புதல்களைஆக்கபூர்வமான தீர்வுகளாக விழிப்புணர்வுடன் மாற்ற வேண்டும்.அகங்காரம் என்பது எப்போதுமே தற்காக்கும் தன்மையுடையது.உங்கள் தவறுகளை நீங்கள் உணர அகங்காரம் ஒருபோதும் அனுமதிக்காது.நீங்கள் செய்வதுதான் சரி,மற்றவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள் என்று உங்களை நம்ப வைக்கும்.நீங்கள் ஒருபோதும் தவறே செய்ய மாட்டீர்கள்,மற்றவர்கள் எப்போதும் தவறு மட்டுமே செய்வார்கள் என்று உங்களை எண்ணவைக்கும்.உங்கள் அகங்காரம் உங்களுக்கு வசதியாக இருந்தால் எப்போதும் இந்த பிரமையிலேயே இருப்பீர்கள்.சராசரி மனிதர்கள் கூட இந்த அகங்காரத்திற்கு ஆளாகிறார்கள்.
ஏனெனில் அகங்காரம் எப்போதும் வெளிச்சூழலின் பாதிப்பிற்குரியது.அது உயர்வு மனப்பான்மையையோ தாழ்வு மனப்பான்மையையோ உருவாக்கி விடுகிறது. அகங்காரத்திற்கு உட்பட்டவர்கள் எந்தச் சூழலுக்கும் தங்களை பொருத்திக் கொள்ளவே மாட்டார்கள்.
அகங்காரத்தை வெற்றி கொள்ள முதல் வழியும் உறுதியான படிநிலையும் என்னவென்றால்,உங்கள் பலங்களையும் பலவீனங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அகங்காரம் ஆளுமை செலுத்துகிறபோது மனிதத்தன்மை பின்னுக்குச் சென்று விடுகிறது.ஏற்கும் தன்மை ஏறக்குறைய இல்லாமலேயே போகிறது.அகங்காரத்தின் இந்த விளையாட்டில் உங்கள் சுயத்திற்கு இடமே இல்லாமல் போகிறது.
மனதின் இந்தத் தன்மையைத் துருத்த அனுமதிப்பதன் மூலம் பலர் வாழ்வின் சாரத்தையே இழந்து விடுகிறார்கள்.
No comments:
Post a Comment