Thursday, 10 October 2013

குருவாரம் குருவார்த்தை - 45


கவலை கொள்ளக்கூடாது என்றுதான் எண்ணுகிறேன்.ஆனால் என் மனம் எப்போதும் ஏதாவதொரு கவலையில் உழல்கிறது. ஏன் இப்படி நடக்கிறது?
 
 
 


சில ஒழுக்கங்கள் சார்ந்த நடைமுறைகளுக்கு உங்களை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால்,உங்கள் மனம் சோம்பியிருக்கவே விரும்பும்.உடலையும் மனதையும் தயார்நிலையில் வைத்திருப்பதே இந்த ஒழுக்கம் சார்ந்த நடைமுறை.

கவனமும் கவனக்குவிப்பும் இருந்தால் அவற்றை கற்றுக் கொள்ளலாம்.தொடர் பயிற்சியே ஒழுக்கமாகிறது.பின்னர் அதுவே வழக்கமாகிறது.ஆனால் இதேமுறையில்தான் சில எதிர்மறையான அம்சங்களுக்கும் பழகியிருப்பீர்கள்
.

பெரும்பாலும் மனம் இயந்திர கதியிலேயே செயல்படுகிறதே தவிர

கவனம் குவிக்கப்படுவதை அது விரும்புவதில்லை.ஏனெனில் கவனம் என்பதே தொடக்கநிலை தியானம் போன்றதுதான்.எனவே மனிதர்கள் தாங்கள் எதையெல்லாம் பழகிக் கொண்டார்களோ அவற்றை சார்ந்து வாழவே விரும்புகிறார்கள்.பலர் காபிக்கு அடிமையானது கூட அப்படித்தான்
.

வழக்கமான ஒன்றைச் செய்வதற்கு எவ்வித கவனமும் தேவையில்லை.எதிர்மறையான ஒன்று உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால் மெல்ல மெல்ல அது உங்கள் வழக்கமாகி விடுகிறது.எனவே பலரும் தங்கள் வழக்கங்களிலேயே மகிழ்ச்சியாக லயித்துக் கிடக்கிறார்கள்.விழிப்புணர்வே இல்லாமல் அதிலேயே தொடர்கிறார்கள்
.

உதாரணமாக நீங்கள் விரும்பாத சூழ்நிலைகளில், கோபப்படுவது என்கிற எதிர்வினைக்கு நீங்கள் பழகிவிட்டீர்கள்.அதற்கேற்பவே உங்கள் மனோபாவம் வடிவமைக்கப்பட்டு விட்டது.எனவே விரும்பத்தகாத சூழல் ஏதேனும் ஏற்பட்டால் கோபப்பட்டாக வேண்டும் என்று எண்ணத் தொடங்கி விடுகிறீர்கள்
.

இதுபோன்ற தீர்மானங்களுக்குள் எந்தவித விழிப்புணர்வுமின்றி நுழைகிறீர்கள். காலப்போக்கில் கோபமாயிருப்பது உங்களுக்கு மிகவும் வசதியாகி விடுகிறது.அமைதியாயிருப்பதை விட கோபமாயிருப்பதையே விரும்பத் தொடங்கி விடுகிறீர்கள்.இப்படித்தான் எதிர்மறை மனோபாவம் உங்களில் படிந்து விடுகிறது
.

கவலையும் அப்படித்தான்.ஆண்டாண்டு காலமாய் காரணமின்றியே கவலைப்பட்டுப் பழகிய சிலருக்கு கவலையாயிருப்பதும் சோகமான முகத்துடன் இருப்பதும் ரொம்பவே பிடித்துப் போயிருக்கும்.மனதிலிருந்த கவலைக்கொரு தீர்வு கிடைத்து விட்டால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை அவர்களால் தாங்கவே முடியாது. வேறொரு கவலைக்கு ஏங்கத் தொடங்கி விடுவார்கள்
.

 
எத்தனையோ வருடங்களாய் பழகிவிட்ட காரணத்தாலேயே கவலையும் கோபமும் உங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாய் ஆகிவிடும்.இந்த எதிர்மறை எண்ணங்களுக்குப் பழகப் பழக அவற்றுக்கு அடிமையாகி உங்களிடமிருந்தும் எதிர்மறை அதிர்வுகள் வெளிப்படத் தொடங்கிவிடும்.போதாக்குறைக்கு எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள் ஏற்படுத்தும் பாதிப்பும் சேர்ந்து கொள்ளும்
.

முதலில் உங்கள் அமைதியை எவையெல்லாம் பாதிக்கிறது என்பதை கண்டுணருங்கள். உங்களுக்கு நீங்களே அறிவுறுத்துங்கள்.ஒரு விஷயத்திற்கு நீங்கள் வழக்கமாக எதிர்வினை ஆற்றும் முறையை மாற்றுங்கள்.கோபப்படுவதற்கு பதிலாக ஏற்றுக் கொள்ள முயலுங்கள்.அல்லது அடுத்தவர் நிலையிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளத் தலைப்படுங்கள்

கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பதை விட்டுவிட்டு உங்கள் அமைதிக்குத் தடையாய் இருப்பவற்றை அடையாளம் காணுங்கள்
.

வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் எதுவும் உங்களை ஒருநாள் ஆய்வு செய்வதால் நிகழாது. தீர்வையும் மாற்றுமுறையையும் கண்டறிந்து ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமாகும் 
 

No comments: