Thursday 15 November 2012

குருவாரம்- குருவார்த்தை 2 ; வாழ்க்கை ஓர் ஊஞ்சல்

                          

லுகி அமைப்பின் தேசியக் கருத்தரங்கான எக்ஸ்ப்ளோர் நிகழ்வில் பாலரிஷி ஆற்றிய உரையிலிருந்து..


வாழ்க்கை ஒருவகையில் ஊஞ்சல் போன்றதுதான். மனிதர்கள் எப்போதும் ஒர் எல்லையிலிருந்து இன்னோர் எல்லைக்கு ஊஞ்சலாடிக்கொண்டே இருக்கிறார்கள். பதட்டத்திலிருந்து அமைதிக்கு,சிக்கலில் இருந்து தீர்வுக்கு, நோயிலிருந்து ஆரோக்கியத்துக்கு மாறி மாறி ஊஞ்சலாடும் விதமாகத்தான் பலருக்கும் வாழ்க்கை இருக்கிறது. ஊஞ்சல் ஒர் எல்லையை நோக்கிச் செல்லும்போது ஒருவிதமான அனுபவமும் மற்றோர் எல்லையை நோக்கிச் செல்லும்போது வேறுவிதமான அனுபவமும் ஏற்படுகின்றன.

மகிழ்ச்சி ஒருவிதமான அனுபவத்தைத் தருகிறது. துக்கம் வேறுவிதமான அனுபவத்தைத்  தருகிறது. எல்லா அனுபவங்களிலும் நீங்கள் எதையாவது கற்றுக்கொள்கிறீர்கள். உங்களிடமே ஒளிந்து கிடக்கும் சாத்தியக் கூறுகள் என்னென்ன என்றும் உணர்கிறீர்கள். எனவே உங்களின் ஒவ்வோர் அனுபவமும் ஏதோ ஒன்றைக் கண்டறிய உதவுகிறது.

நீங்கள் ஒவ்வோர் அனுபவத்திலிருந்தும் துல்லியமாக எதையேனும் கண்டறிய வேண்டுமென்றால், எல்லா அனுபவங்களையும் முழு விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டும். எப்போதும் எல்லாவற்றையும் பற்றி புகார் செய்து கொண்டேயிருக்கும் மனிதர்களைப் பார்த்தால், இவர்கள் சுய சோகங்களுக்கு அடிமையாகிவிட்டது போலத் தோன்றும். சிக்கல்களுக்கும் சோகங்களுக்கும் அடிமையாவது அகங்காரத்தை வளர்க்குமே தவிர உங்களை நீங்களே சுய ஆய்வு செய்ய உதவாது.

உங்கள் எண்ணங்களை நீங்களே உற்று கவனித்து, எண்ண ஓட்டங்களின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்காணித்து, உங்கள் பலங்களையும் பலவீனங்களையும் எழுதத் தொடங்கினால் உங்கள் பழக்கங்களையும், அணுகுமுறைகளையும் உணர்ச்சி நிலைகளையும் எடைபோட முடியும்.

இந்த ஆய்வு, உங்களுக்கு அமைதி தருவதோடு, உங்கள் சிக்கல்களுக்குத் தீர்வும் தரும். இந்த ஆய்வு உங்களுக்கு ஒன்று, தெளிவைத் தரும். அல்லது ஏற்கும் தன்மையைத் தரும்.

No comments: