Thursday 22 November 2012

குருவாரம்- குருவார்த்தை 3 ; அருளுரை


(20.11.2012 அன்று கர்நாடிகா அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெறும்  ஒருவார கால பாரம்பரிய இசைவிழாவான பாரத் உத்ஸவ் நிகழ்ச்சியினை ஸ்ரீ பாலரிஷி அவர்கள் தொடங்கிவைத்து அருளுரை நிகழ்த்தினார்.அவருடைய உரையிலிருந்து.....)




"ஒலிகளுக்கெல்லாம் மூலமாகத்திகழ்வது பிரணவமாகிய ஓங்காரம்.உயிர்களுக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதுவே மூலம். அதனால்தான் இசை எல்லா உயிர்களுக்கும் நெருக்கமானதாக விளங்குகிறது. மந்திரங்கள் நாதத்துக்கான பாதையாகத் திகழ்கிறது. சங்கீதமும் நாதத்துக்கான பாதையாகத் திகழ்கிறது.குருவிடம் நீங்கள் பெறுகிற மந்திர தீட்சையும் ஒலியினுடைய சாரத்தை பூட்டி பிரயோகமாகப் பெறுகிற விஷயம்தான். அதுவும் நாதத்துக்கான பாதையாகத் திகழ்கிறது.

சங்கீதத்தின் மூலம் பிரணவம் என்பதால்தான், சங்கீதத்தை அர்ப்பணிப்புணர்வோடு பாடும்போது ஆன்மபூர்வமாக ஆலாபனை செய்யும்போது, அதுவே ஒரு தியானமாகத் திகழ்வதுடன் அதன் நல்லதிர்வுகள் சபையில் அமர்ந்து கேட்பவர்களுக்கும் நன்மை தருகின்றன.

அதனால்தான் இந்தியாவின் செவ்விசை மரபு தெய்வாம்சம் நிறைந்ததாகத் திகழ்வதுடன் தெய்வத்திற்கு அர்ப்பணமாகும் தன்மையிலேயே உருவாகியுள்ளது. கர்நாடக இசையில் இறைவனைப் பாடும்போது பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஏற்படும் உருக்கம், ஒரு கம்ப்யூட்டரைப் பற்றிப் பாடும்போதோ மொபைல்ஃபோனைப் பற்றிப் பாடும்போதோ ஏற்படப் போவதில்லை.ஏனெனில் அந்த வடிவங்களுக்கோர் எல்லையுண்டு. இறைவனுக்கு எல்லையில்லை. எல்லையே இல்லாத இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் இசையானது, நாதம் நோக்கி வழிநடத்த வல்லது. இசை,மந்திரம்,எல்லாமே இந்த நிறைவை நோக்கிய பயணம்தான். இசைவழியே மனத்தூய்மை,மன உருக்கம்,மனநிறைவு ஆகியவற்றை அனைவருக்கும் இத்தொடர் நிகழ்ச்சிகள் வழங்க வேண்டுமென்று பிரார்த்தித்து "பாரத் உத்ஸவ்" தொடர் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்"

No comments: