Thursday 20 December 2012

குருவாரம் குருவார்த்தை-7


ஒருசில காரியங்கள்நம் முயற்சிகளையும் பிரயத்தனங்களையும் தாண்டி தடைபட்டுப் போகின்றன. அந்தத் தடைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகவும் தோன்றுகின்றன. லௌகீக வாழ்விலும் அத்தகைய தடைகள் வருகின்றன. இந்தத் தடைகளைத் தாண்டிச் செல்வது எப்படி ?

   காரியங்களில் வருகிற தடைகள் என்பவை,உங்கள் கடந்த பிறவிகளுடன் தொடர்புள்ள   விஷயம்.   உங்கள்    கர்மவினையின் கட்டமைப்புடன் அவற்றுக்குத் தொடர்புண்டு. அதற்காக,   அதிலிருந்து   நீங்கள்       மீளவே முடியாது   என்று   பொருளில்லை. நீங்கள் எண்ணுகிற விதம்நீங்கள் வகுத்திருக்கும்   இலக்குகள்    செய்ய    விரும்புகிற    செயல்கள்
என்று அனைத்திலுமே முற்பிறவிகளின் பதிவுகள் இருக்கும். சிலர் பள்ளிப் படிப்பில் பெற்ற வெற்றியை கல்லூரியில் பெற  மாட்டார்கள். சிலருக்கோ எதிலும் முதல் முயற்சியிலேயே வெற்றி வரும். ஆனால் சிலர் தொடர்ந்து முயற்சிகள் செய்து கொண்டேயிருக்க வேண்டி வரும். இவையெல்லாமே கடந்த பிறவிகளின் தாக்கம் காரணமாய் ஏற்படுபவை. 

நாமெல்லோருமே இயற்கையை சார்ந்தவர்கள்.இயற்கைக்கென்றொரு சுழற்சி உண்டு. இது எல்லோருக்கும் புரியாது. சற்றே சூட்சுமமாய் உள்ளவர்கள் இதனை  உணர்ந்து கொள்ள முடியும். உங்களுக்குள் இருக்கும் விருப்பங்கள் வெறுப்புகள்தேடல்கள் எல்லாமே இப்போது வந்ததல்ல. எப்போதோ விதையாக விழுந்து செடியாய் மரமாய் வளர்ந்து நிற்பவைதான் அவை. இதைத்தான் "என் பார்வை வேறு உன் பார்வை வேறு"என்கிறோம். வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலுமே அதன் ஆழத்தை நீங்கள் உணர முடியும்.

சொல்லப் போனால் உங்கள் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமுமே உங்களுக்குத் தூய்மையையும் தெளிவையும் தருவதற்குத்தான் நிகழ்கிறது. நீங்கள் விரும்பாத சம்பவங்கள் கூட அதற்குத்தான் நிகழ்கின்றன. வலியையும் துன்பத்தையும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் அவற்றின் படிநிலைகள் ஒருவிதமான
தெளிவையும் தூய்மையையும் தருகின்றன.உங்களுக்குள் ஒருவகை முதிர்ச்சி இருந்தால் ஒவ்வொரு சம்பவத்திலிருந்துமே நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஒரு சம்பவத்தால் உங்களுக்கொரு வலி வருகிறது. அந்த வலியின் சக்தி உங்கள் செயலின் தெளிவை மேம்படுத்தும்.ஒவ்வொரு செயலையுமே அது ஏன் நிகழ்ந்ததென்று ஆய்வு செய்வீர்கள்.

உங்கள் கர்மவினையின் கட்டமைப்பு நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பதிவு செய்கிறது. சிலவற்றை நீங்கள் விளையாட்டாக செய்வீர்கள். சிலவற்றை ஈடுபட்டு செய்வீர்கள்.சிலவற்றை விழிப்புணர்வுடன் செய்வீர்கள்.சில செயல்கள் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இவையெல்லாம் விட்டுப்போன எண்ணங்களின் பிரதிபலிப்பேயன்றி வேறில்லை. இந்தத் தெளிவு இல்லையென்றால் உங்களுக்குள் இருக்கும் தடைகள் வலுப்பெறும். சுயநலமானவராக இருப்பவர்கள் இந்தத் தெளிவைப் பெறாவிட்டால் இன்னும் சுயநலம் மிக்கவர்களாய் உருவாவார்கள்.தொடர்ந்து தவறுகளையே செய்வார்கள்.

வாழ்க்கை என்பது சுழன்று கொண்டேயிருக்கிற சக்கரம். உங்களுக்கான திருப்பத்தை அது தரும். அப்போது சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்லது. சிலர் அப்போது அதிகமாக ஆட்டம் போடுவார்கள். ஆனால் வாழ்க்கை தன் விளையாட்டைத் தொடங்கினால் அதனை எதிர்கொண்டே தீர வேண்டும்.அவற்றைத்தான் நீங்கள் தடைகள் என்கிறீர்கள். முறையான ஆன்மீகப் பயிற்சி,தியானம்,சக்திமிக்க தீட்சை போன்றவற்றால் இந்தத் தடைகளை எரிக்கும் தகுதியைப் பெறமுடியும். சுய ஆய்வுமந்திர உச்சாடனங்கள் மூலம் உங்கள் ஆன்மீக சக்தியைத் தூண்டிவினைகளால் எழுந்த இந்தத் தடைகளை எரிக்கலாம். எப்போதுமே தடைகளைத் தாண்டிப் போகலாம் என்று கருதக் கூடாது. ஒருவகையில் தாண்டிய தடையை இன்னொரு விதத்தில் நீங்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். கர்மவினைகளை எரிக்க முடியும். அதேநேரம் அது அவ்வளவு எளிதான விஷயமில்லை. 

லௌகீக வாழ்வில் சில விஷயங்களில் வரும் தடைகள் குறித்தும் நீங்கள் ஆய்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கை என்பதே உயர்ந்த நோக்கங்களுக்கானது. சில சமயங்களில் சில காரியங்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படலாம்.அல்லது உங்களுக்கு சம்பந்தமில்லாத காரியத்தில் நீங்கள் ஈடுபட்டு முயற்சிசெய்து கொண்டிருக்கலாம். சுயநலத்தோடு சில முயற்சிகளை செய்வதுகூட தடையாக மாறலாம். உங்கள் காரியங்களில் தடைகள் நீங்க வேறேதும் ஒரு சேவையில் சுயநலமில்லாமல் ஈடுபடுவது கூட உங்கள் எண்ணத்தில் தூய்மையையும் தெளிவையும் தரும்.

ஏனென்றால் எண்ணம் கூட ஒருவகை செயல்தான். பாரபட்சமின்றி உங்கள் உள்நிலையில் ஆய்வு செய்தால் இந்தத் தெளிவு வரும் ஏற்கிற தன்மை யாருக்கு வருகிறதோ அவர்கள் வாழ்வில் வசந்தம் வரும்ஏற்கிற தன்மை என்றால் நீங்கள் செய்கிற செயலில் முழு ஈடுபாடும் முயற்சியும் இருக்கும்.அதேநேரம் அதன் விளைவுகளை முழு மனதுடன் ஏற்பீர்கள். இந்த உபாயங்களைக் கைக்கொண்டால் லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் ஏற்படக் கூடிய தடைகளை எரிக்கலாம்.

No comments: