Thursday 10 January 2013

குருவாரம் குருவார்த்தை-10

  Image Crossroads (C) by www.martin-liebermann.de

தாய்நிலம் தந்தவரம் தாவரம் என்கிறார்கள். ஆனால் சில மரங்கள் தீய சக்திகளின் இருப்பிடங்களாகக் கருதப்படுகின்றன. மனிதர்களைப் போலவே மரங்களிலும் நல்லவை கெட்டவை என்னும் பாகுபாடுகள் உண்டா?

மரங்களைப் பொறுத்தவரை அவற்றின் தாவரவியல் தன்மையையும் தாண்டி சில குணாதிசயங்கள் இருக்கும். சில மரங்கள் ஆன்மீகத் தன்மை கொண்டவையாக இருக்கும். சில மரங்கள் வெறும் தாவரங்களாக இருக்கும். ஒருசில மரங்கள் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டவையாக இருக்கலாம். இதைப் பொதுவாகப் பார்த்தால்ஆன்மீகத் தன்மை கொண்ட மரங்களுக்கருகே தீய அதிர்வுகளை ஈர்க்கிற மரங்கள் இருக்காது. மரங்களில் அவற்றுக்கான அதிர்வலைகள் போலவே மற்ற சக்திகளை ஈர்க்கிற அம்சமும் உண்டு. ஒரு தாவரம் தன்னுடைய சக்திநிலைக்கு ஒத்த அதிர்வுகளை ஈர்க்கின்றது.


உதாரணமாகவேப்பமரத்தைப் பொறுத்தவரைஅதில் அம்பாளின் சக்திநிலை உள்ளது. அம்பாளுக்குரிய மந்திரங்களைச் சொன்னால் அதன் அதிர்வுகளை வேப்பமரம் ஈர்க்கும். ஏனெனில் மந்திரங்களின் அதிர்வலைகளும் வேப்பமரத்தின் சக்திநிலையும் ஒன்று.  அதேபோல புத்தர் போதிமரத்தின் கீழ் ஞானமடைந்தார் என்பது எதேச்சையான நிகழ்வல்ல. நீண்ட நெடுங்காலம் தவம் செய்த ஒருவர் ஞானோதயம் அடைய உறுதுணையான அதிர்வுகள் போதியில் இருப்பதாகவே பொருள்.


நேர்மறை போலவே எதிர்மறையும் இருக்கும். நல்லவற்றை ஏற்பது போலவே தீயதை ஏற்கும் தன்மையும் சில தாவரங்களில் இருக்கும். இதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்று தெரிந்து வைத்துக் கொண்டாலே போதுமானது. மரங்களின் பாஷைகளைப் புரிந்து கொள்வதும்அவை என்ன சொல்கின்றன என்று அறிந்து கொள்வதும் அற்புதமான விஷயங்கள் !

No comments: