Thursday 7 March 2013

குருவாரம் குருவார்த்தை-18

மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் என்ன? ஆன்மீகத்தில் அதிக பரிச்சயம் இல்லாத ஒருவர் அந்த இரவைத் தன் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும்?
              ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்காவது  நாள்
மாத  சிவராத்திரியாகும். மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி,    மஹாசிவராத்திரி
எனப்படும். ஏனெனில் புராணங்களின்படி சிவசக்தி தொடர்பான பல முக்கிய சம்பவங்கள், மஹாசிவராத்திரியிலேயே நிகழ்ந்தேறின.
             இமவானின் மகள் பார்வதியாக  சக்தி தோன்றி சிவனை மணக்கத் தவம் புரிந்தார். அவர்களின் திருமணம் நிகழ்ந்தேறியது மஹாசிவராத்திரியில்தான். சிவசக்தியின் ஆனந்த தாண்டவம் நிகழ்ந்தேறியதும் மஹாசிவராத்திரியில்தான்.
              திருமாலுக்கும் நான்முகனுக்கும் இடையே,இருவரில் யார் பெரியவர் என்கிற போட்டி எழுந்தது. சிவபெருமானிடம் தீர்ப்பை வேண்டி இருவரும் சென்றனர். இருவருக்கும் பாடம் புகட்ட  நினைத்த  சிவபெருமான்  ஜோதிப்பிழம்பாக எழுந்து  நின்றார்.   சிவபெருமானின் திருவடியைக்  காணும் விருப்பத்துடன் வராக வடிவெடுத்து திருமால் பாதாளம் நோக்கிப் பயணமானார். சிவபெருமானின்   திருமுடி    காணும்    விருப்பத்துடன்    நான்முகன் அன்னப்பறவை வடிவெடுத்து,விண்நோக்கிப் போனார். இருவராலும் அடிமுடி காண இயலவில்லை.
              ஜோதி வடிவாய் நின்ற இறைவனை சொரூபமாக வணங்க நினைத்த தேவர்களின் பிரார்த்தனைக்கு     மனமிரங்கி   சிவபெருமான்      லிங்கோத்பவராகக் காட்சி     தந்தார் உத்பவம் என்றால் காட்சிதருதல் என்று பொருள்.இந்த சம்பவம் நிகழ்ந்ததும்
மஹாசிவராத்திரியில்தான்.
              புராணங்களில்     மட்டுமின்றி,       யோக   மரபிலும்     மஹாசிவராத்திரிக்கு    மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது,   ஏனெனில் இந்த   இரவு   இயல்பாகவே    அனைத்து விதமான   ஆன்மீகப் பயிற்சிகளுக்கும் உறுதுணையாக விளங்குகிறது.  இறைநிலையுடன் தொடர்பு கொள்ள யார் விரும்பினாலும்இந்த இரவில் இயல்பாகவே அதற்குக் கிடைக்கக் கூடிய  உதவிகளைப்    பயன்படுத்திக்   கொள்ளலாம்.  நீங்கள் ஏதேனும் ஓர்  ஆன்மீக  வழியில்        தீட்சை  பெற்றிருந்தால்      மஹாசிவராத்திரியில் அந்த     சாதனையை  மேற்கொள்ளுவது     மிகவும்      விசேஷமானது.     ஆத்ம சாதகர்கள் மஹாசிவராத்திரியில் உபவாசம்   மேற்கொள்ளுமாறு     அறிவுறுத்தப்படுவதே,   தங்களுக்குள்    நிகழும் ஆன்மீக வளர்ச்சியினை முழு விழிப்புணர்வுடன் அறிந்து  கொள்ளத்தான்.
                   ஒருவருக்கு     ஆன்மீகத்தில்      அதிக            பரிச்சயம்           இல்லையென்றாலும்    மஹாசிவராத்திரியில் கண்விழித்து முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தாலே உள்நிலையில்      தூய்மையையும் ஆன்மீக    அனுபவத்தையும்     உணரலாம். தோத்திர நூல்களை வாசித்தல் பஞ்சாட்சரம் ஒதுதல் போன்றவற்றில் மஹாசிவராத்திரி முழுவதும் ஈடுபடலாம்.
                 மஹாசிவராத்திரி முழுவதுமே ஆத்மசாதனைகளுக்கு     உகந்தது.      குறிப்பாக அர்த்தஜாமமாகிய இரவு இரண்டு மணி முதல் ஐந்துமணிவரை மிகவும் விசேஷமானது.

No comments: