Thursday 11 April 2013

குருவாரம் குருவார்த்தை-23

டெட்x என்னும் தொண்டு நிறுவனம், 2013 ஏப்ரல் 6ஆம் தேதி கோவை லீமெரிடியன் அரங்கில் டிவோட் என்னும் தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. பாலரிஷிஸ்ரீ விஸ்வசிராசினி அவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு STAY TUNED (இணைந்திருங்கள்)எனுந் தலைப்பில்  உரைநிகழ்த்தினார். அந்த உரையின் தமிழ் வடிவத்தின் முதல் பகுதி இது.

அர்ப்பணிப்பு என்றால் என்ன?

ஒரு காரியத்துக்கோ அல்லது கடவுளுக்கோ உங்களை முழுமையாக ஒப்புக்  கொடுப்பதற்கு அர்ப்பணிப்பு என்று பெயர். இன்று  பகுதிநேர  வேலைபகுதிநேரத்  தொழில்  என்று இருப்பதுபோல்,பலரும் அர்ப்பணிப்பை  பகுதிநேரமாய் செய்யக்கூடிய  விஷயமாகப் பார்க்கிறார்கள்.ஏனென்றால்,அர்ப்பணிப்பு என்றால் அது ஏதோ சமயம் சம்பந்தப்பட்டதென்றும்,அதனால் தங்கள் அன்றாட  வேலைகள்  பாதிக்கப்படுமென்றும் தவறாகக் கருதுகிறார்கள்.ஆனால் உண்மையில் அர்ப்பணிப்பு என்பது உங்கள் மனதின் தன்மையாகவே ஆகிவிடுமென்றால்அது உங்கள் குடும்பக் கடமைகளுக்கோ அலுவலகக்  கடமைகளுக்கோ ஒருபோதும்  தடையாக இராது.

தீவிரமான அர்ப்பணிப்புணர்வுடன் நீங்கள் அனைத்தையும்  செய்து  வருவீர்களென்றால் ,  உங்கள் அன்றாட  வேலைகள்  கூட  மனநிறைவின்  மணம்  கமழும் விதமாய் மலரும். நீங்கள்  எவற்றையெல்லாம் விழிப்புணர்வோடும் அர்ப்பணிப்புணர்வோடும் செய்கிறீர்களோஅவையெல்லாமே  தியானத்திற்கு  சமமானவைதான்.




அர்ப்ப்பணிப்பும் இணைந்திருத்தலும் இருவேறு அம்சங்கள் அல்ல. அவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. ஒன்றுக்கொன்று துணையாய் இருப்பவை.  

இன்று பல தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் ஒளிபரப்புடன் உங்களை இணைந்திருக்கச் சொல்கின்றன.நாள்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில்
உங்களை இணைந்திருக்கச் சொல்கின்றன.  வாழ்க்கை என்பதே ஒரு நேரடி ஒளிபரப்புதான். ரிஷிகளும் சித்தர்களும் இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும்
முழுமையாக இணைந்திருந்தார்கள். தங்களைவிட மேம்பட்ட சக்தியிடமிருந்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதிர்வலைகள் அனைத்தையும் அவர்களால் முழுமையாக உள்வாங்க முடிந்தது. அந்த சக்தியை நீங்கள் இயற்கையென்றும் சொல்லாலாம், இறைவன் என்றும் சொல்லலாம்.

முன்னர் குறிப்பிட்ட தொலைக்காட்சி உதாரணத்தையே மீண்டும் எடுத்துக்  கொள்ளலாம். நீங்காள் வீட்டில் அமர்ந்து  குறிப்பிட்ட  தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். படக்காட்சியோ படத்தின் ஒலியோ சரியாக இல்லையென்றால் நீங்கள் ஏமாற்றமடைகிறீர்கள். உடனே  பக்கத்து  வீட்டுக்குப் போய் அவருடைய தொலைக்காட்சியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பீர்கள். பக்கத்து வீட்டுக்காரரின் தொலைக்காட்சி நன்றாக இயங்கினால்  சிலருக்கு இன்னும் ஏமாற்றமாகிவிடும்.

அந்தத் தொலைக்காட்சி சேனல், உங்கள் வீட்டுக்கு  வருகிற ஒளிபரப்பை மட்டும்  கோளாறுள்ளதாய் ஆக சதி ஏதும் செய்யவில்லை. அந்த ஒளிபரப்பை
உள்வாங்கும் உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ கோளாறு இருப்பதாகப்
பொருள்.அதை சரிசெய்ய வேண்டும்.

அதே போல பல மேல்நிலை சக்திகள் அனுப்பும் அதிர்வுகளை உள்வாங்கும் விதமாக உங்கள் உடலும் மனமும் இயங்க வேண்டுமென்றால்,பிரபஞ்ச சக்தியுடன்
நீங்கள் இனைந்திருக்க வேண்டுமென்றால் உங்கள் உடல் என்ற  கருவியையும்  மனம் என்ற கருவியையும் நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும்.

யோகா, தியானம், பிரார்த்தனை போன்றவையெல்லாம், உங்கள் உள்நிலையை  பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் வைத்திருப்பதற்கான கருவிகள்தான். இன்று உலகெங்கும் பலவிதமான குழப்பங்களும் அமைதியின்மையும் காணப்படுகின்றன. இதற்குக் காரணம், மனிதர்கள் தங்கள் உள்நிலையின்  வலிமையை  நீர்த்துப் போகச்செய்து, குணாதிசயத்திலும் மனநிலையிலும் அணுகுமுறையிலும்  பலவிதமான சீர்குலைவுகளை ஏற்படுத்தியிருப்பதுதான்.பிரபஞ்ச சக்தியுடன் இனைந்திருத்தல் வாழ்வுக்கு மிகவும் முக்கியம்.
  

No comments: