Thursday 25 April 2013

குருவாரம் குருவார்த்தை-25

ஸ்ரீ பாலரிஷி அவர்கள் புகழ்பெற்ற கவியாகிய ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களால் வழினடத்தப் படும் நுன்களைகளுக்கான அமைப்பாகிய "தாயின் மடியில்" என்ற அமைப்பினை துவக்கி வைத்தார். அந்த அமைப்பின் சின்னம் வெளிஈட்டுக்குபின்னர் ஆற்றிய உரையில் இருந்து..


தாய்மடி என்ற சொல்லே சுகமான உணர்வையும் பாதுகாப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடியது. கலை இலக்கியங்களும் ஒரு மனிதனுக்கு தாய்மடி போலத் திகழ வேண்டியவைதாம். இயல் இசை நாடகம் என எடுத்துக்கொண்டால் அவை எல்லாமே வெளிப்பாடு சார்ந்தவை.
அதேநேரம் இந்த வெளிப்பாடுகளில் சில, புரிதலின் அடிப்படையில் இருக்கும். இன்னும் சில அனுபவித்து உணர வேண்டியவையாய் இருக்கும். அனுபவ ரீதியாய் உணர வேண்டியவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதும், புரிதல் சார்ந்த விஷயத்தை அனுபவமாகப் பார்க்க முயல்வதும் வீண் குழப்பங்களையே விளைவிக்கும்.

உதாரணமாக, கீர்த்தனை ஒன்றின் ஸ்வரக் குறிப்புகள் ஒருவருக்குக் கிடைத்தால், புரிதல் அடிப்படையில் அவர் அதனை உள்வாங்க முடியாது. இசையறிந்த யாராவது அதனைப் பாடிக்காட்டினால் அவரால் அதை அனுபவிக்க முடியும்.

.இன்று இளையதலைமுறையைப் பொறுத்தவரை, முன்பெல்லாம் நாற்பது ஐம்பது வயதுகளில் கிடைக்கக்கூடிய எல்லாமே அவர்களுக்கு முப்பது வயதுக்குள் கிடைத்துவிடுகிறது. எனவே அவர்களுடைய உணர்ச்சிகள் ஆக்கபூர்வமான வெளிப்பாடு இல்லாமல் கோபமாகவும் அழுகையாகவும் குமுறலாகவும் வெளிப்படுகின்றன. அவர்கள் தங்களை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்திக் கொள்ள நுண்கலைகள் பேருதவியாக இருக்கும். கலைகள் என்பவை ரசிப்பவர்களுக்கு மட்டுமின்றி படைப்பவர்களுக்கும் தாய்மடியாகத் திகழ்பவை என்பதை இந்த இயக்கம் அனுபவபூர்வமாய் அனைவருக்கும் உணர்த்த என் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.

No comments: