Thursday 30 May 2013

குருவாரம் குருவார்த்தை-30

வாழ்வில் பல சாதனைகள் செய்பவர்கள் கூட மனநிறைவு கொள்வதில்லை.. இன்னும் என்னவோ செய்ய மீதமிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்படுகிறது. இது எதனால் வருகிறது?

நீங்கள் சாதனை என்று எதைச் சொல்கிறீர்கள் ? சில ஆசைகள், சில விருப்பங்கள்,சில நோக்கங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதையே சாதனை என்கிறீர்கள். இவை பொருளாதாரம் சார்ந்த இலக்குகளாக இருக்கலாம். அல்லது உணர்ச்சிகள் சார்ந்த இலக்குகளாக இருக்கலாம். இவற்றை வாழ்வின் குறிப்பிட்ட நேரமொன்றில் எட்டியிருக்கலாம். இவை உங்களுக்கு செல்வத்தைத் தரும். பாராட்டையும் புகழ்மொழிகளையும் பெருமைகளையும் பெற்றுத் தரும். இவற்றையெல்லாம் அடைந்து கொஞ்ச காலத்திற்குப் பிறகு இவற்றை நீங்கள் அடைய விரும்பியிருந்தாலும் இவை மட்டுமே உங்கள் இலக்கல்ல என்பதை உணர்கிறீர்கள்.

அப்படியானால் நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்கிற கேள்வியும் அந்தக் கேள்வி சார்ந்த தேடலும் உங்களுக்குள் தொடங்குகிறது. இப்போதுதான் நீங்கள் உங்கள் வாழ்வின் நோக்கத்தை நோக்கி நகரத் தொடங்குகிறீர்கள். தனிப்பட்ட இலக்குகளை எட்டுவது மட்டுமே வாழ்வின் நோக்கமல்ல என்பது உங்களுக்குப் புரிகிறது. ஒரு கட்டத்தில் உங்கள் சாதனைகள் கூட உங்களுக்கு வேடிக்கையாகவும் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது.



இந்தத் தேடல் தீவிரமாகும்போது இந்தத் தேடலே உங்கள் வாழ்வின் நோக்கத்தை நோக்கி உங்களை வழிநடத்தும். பொதுவாக, வாழ்வின் நோக்கம் என்பது உங்களை சக உயிர்களுடன் சம்பந்தப்படுத்தும் போது நீங்கள் கண்டடைவது.உங்கள் இலக்குகளையும் ஆசைகளையும் மையப்படுத்தி நீங்கள் கெயல்படும்போது தன்னலத்துடன் இயங்குகிறீர்கள்.

ஆனால் தன்னலமற்ற தன்மையில் பெரிய இலட்சியத்திற்கோ பொது நோக்கத்திற்கோ நீங்கள் இயங்குகிறபோது,உங்கள் வாழ்வின் நோக்கத்தையே கண்டடைந்ததாக உணர்கிறீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கை உயிர்ப்பு மிக்கதாகத் தோன்றுகிறது.வாழ்வின் நோக்கத்துக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அர்த்தம் மிக்கதாகவும் ஆனந்தம் மிக்கதாகவும் அமைகிறது.

எனவே உங்கள் இலக்குகளையும் ஆசைகளையும் எட்டிவிட்டு வாழ்வின் அழைப்புக்காகக் காத்திருங்கள்.அதுவே உங்கள் நோக்கத்தை நோக்கி உங்களை வழிநடத்தும்.

No comments: