Wednesday 12 June 2013

குருவாரம் குருவார்த்தை-32

மற்ற உயிரினங்களைக் காட்டிலும் ஆன்மீகத்தில் பாம்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?
இந்த வலைப்பூவில் சில வாரங்களுக்கு முன்பு, கடவுளிடம் வெவ்வேறு மொழிகளில் பிரார்த்திப்பது குறித்துப் பேசியிருந்தோம். மொழிக்கு உள்ள பங்கு மேலோட்டமானதுதானே தவிர எண்ணங்கள் மற்றும் ஒலி அதிர்வலைகளுக்கே பிரதானமான இடம் தரப்படுகிறது. தொடர்பு கொள்ளப் பயன்படும் மொழி உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தாமலும் போகலாம். இந்த  உணர்வலைகளை உள்வாங்குவதில் பாம்புகள் தன்னிகரற்று விளங்குகின்றன. எண்ணங்களின் அதிர்வலைகளை கிரகிக்கிற ஆற்றல் பாம்புகளுக்கு உண்டு.
உங்களிடமே ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்றால், தான் மனதில் எண்ணிக் கொண்டிருப்பதற்கு முற்றிலும் மாறாகப் பேசினால் அதை உங்களால் ஓரளவு உணர முடியும். காரணம், அவருடைய வார்த்தைகளை விடவும் எண்ணங்களின் அலைகள் வலிமையானவை. நாக்கில் தேனைத் தடவிக் கொண்டு பேசினாலும் மனதில் தீய எண்ணங்கள் இருந்தால் ஓரளவு நுட்பமாக இருப்பவர்களுக்கு அது புரியும். ஆனால் தர்க்க அறிவின் குறுக்கீடு காரணமாக இந்த நுண்ணறிவு மனிதர்கள் பலரிடம் சரிவர இயங்குவதில்லை.
ஆனால் இந்த அதிர்வலைகளை உள்வாங்குவதிலும் உணர்வதிலும் பாம்புகள் மிகவும் கூர்மையானவை. பாம்புகளுக்குக் காது உண்டா என்பது பற்றிக் கூட பலர் மத்தியில் இன்றளவும் சர்ச்சைகள் உண்டு. பாம்புகளுக்கு காது கேட்கிறதோ இல்லையோ அவை அதிர்வலைகளை நன்றாக உணர்ந்து அதன்படி செயல்படும். பாம்பை அடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் யாராவது வந்தால் தொலைவிலேயே அவர்களின் நோக்கத்தை பாம்புகள் உணர்கின்றன. உடனே தற்காப்புக்காக சீறவோ கடிக்கவோ செய்கிறது. பாம்புகள் தாமாக எவரையும் கடிப்பதில்லை. மனிதர்கள் பாம்புகளை ஒரு அச்சுறுத்தலாக தவறாக எண்ணுகிறார்கள். எனவே பல அரிய வகை பாம்புகளை அழித்து வருகின்றார்கள். எனவே மனித இனம்தான் பாம்புகளுக்கோர் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
பாம்புகள் தியானத்தன்மை வாய்ந்தவை. எப்படி மனிதர்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காக பூமிக்கு வந்திருக்கிறோமோ அதுபோல பாம்புகளின் பிறப்புக்கும் நோக்கங்கள் உண்டு. பாம்புகளில் பலவகைகள் இருந்தாலும் அவற்றிடையே சில பொதுவான தன்மைகள் உண்டு. இவற்றில் நாகப்பாம்புகள் தனித்தன்மை வாய்ந்தவை. நாகங்களுக்கு சித்தர்கள் மரபுடன் நெருங்கிய தொடர்புண்டு. ஆளரவமற்ற அடர்ந்த வனங்களை சித்தர்கள் தங்கள் ஆத்மசாதனைக்காகவும் தவத்திற்காகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கே தீவிரமான ஆத்மசாதனைகள், கடுந்தவம், மூலிகை ஆய்வு போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அங்கே தங்களுக்கு வேண்டிய ஏகாந்த நிலைக்காக சில கவசங்களைப் பயன்படுத்துகிறார்கள். விலங்குகளிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மந்திரக் கவசங்களைப் பயன்படுத்துவது போலவே, நாக கவசங்களையும் பயன்படுத்துகிறார்கள். நாகங்கள் எல்லைக்காவல் வீரர்களாக அவர்களுக்கு உதவுகின்றன. சில அரிய வகை மூலிகைகளையும் நாகங்கள் பாதுகாக்கின்றன.


சில சமயங்களில் சித்தர்களே நாகங்களின் வடிவெடுத்து குகைகளுக்குள் சென்று ஆழ்ந்த தவத்தில் ஈடுபடுகின்றனர். பாம்புகள் குகைகளில் வசிப்பது போலவே சித்தர்களும் குகைகளில் வசிக்கிறார்கள். இவற்றையும் தாண்டி பாம்புகளின் ஆன்மீகத்தன்மைக்கு மேலும் பல பரிமாணங்கள் உண்டு. அவைகுறித்து பிறிதொரு சமயம் விரிவாகக் காண்போம். 

No comments: