Thursday 8 August 2013

குருவாரம் குருவார்த்தை -39

மனிதர்கள் எல்லோருமே அமைதியைத் தேடுகிறார்கள். இந்த அமைதி எங்கிருந்து வருகிறது?
 

அமைதியான மனநிலை தங்களுக்கு மிகவும் வசதியாயிருப்பதை பலரும் உணர்கிறார்கள்.ஏனெனில், அமைதியாயிருக்கையில் அன்பின் ஒளிவட்டம் அவர்களை சூழ்ந்து கொள்கிறது.பலரும் வாழ்வின் வசதிகள்தான் அமைதி என்றும்,வசதிகள் வந்தால் அமைதி தானே வருமென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அமைதி என்பது நீங்கள் சென்றடையக் கூடிய விஷயமல்ல.அது தானாகவே  நிகழ வேண்டிய ஒன்று.வெளியே நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வசதிகள் தற்காலிகமாய் ஒரு நிம்மதியைத் தரலாமே தவிர,அமைதியைத் தராது.அமைதி என்பது இன்னும் ஆழமானதோர் உணர்வு.



உங்கள் உடலோடும் மனதோடும் நீங்கள் முற்றாகப் பொருந்தியிருக்கையில் அமைதியை உணர்கிறீர்கள்.உள்நிலையோடு நீங்கள் தொடர்பிலிருக்கும் போதும்.இயற்கையுடன் ஆழமாகப் பொருந்தியிருக்கும் போதும்,உங்கள் அமைதி மேலும் சூட்சுமமான தன்மையை அடைகிறது.இப்போது நீங்கள் உங்களை சூழ்ந்திருக்கும் அன்பின் ஒளிவட்டத்தை மேலும் தீவிரமாக உணர்கிறீர்கள்.ஏனெனில் இந்த அன்பு நீங்கள் தேடிப்போகிற ஒன்றல்ல. உங்களுக்குள் ஏற்கெனவே குடிகொண்டிருப்பது.நிபந்தனைகளுடன் கூடிய அன்பு,சார்ந்திருத்தல்,பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடும்போது,இந்த அன்பு எவருக்கும் நிகழலாம். "எனக்கே சொந்தம்" என்னும் மனோபாவம்தான் அன்பு என்று சிலர் நினைக்கிறார்கள். அது பாதுகாப்பற்ற மனவுணர்வின் வெளிப்பாடு.

அன்பு என்பது வெறும் உணர்வல்ல. அது உள்நிலை சக்தி.இந்த சக்தி நிகழ வேண்டுமென்றால் சில நிலைகளை உருவாக்க வேண்டும்.வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல் உடலுக்கும் மனதுக்கும் நல்லிணக்கம் இருக்குமிடத்தில் அன்பு நிலவும். மனம் பதட்டமாக இருந்தால்,அங்கே நேர்மறை எண்ணங்கள் வளர்வது மிகவும் கடினம். அது சாத்தியமென்றாலும் மிகுந்த நேரம் எடுக்கக்கூடும்.

நீங்கள் நல்ல இயல்புகளுடன் இருப்பது மற்றவர்களுக்காக மட்டுமில்லை.
நல்லவராக இருப்பது உங்களுக்கு முதலில் நன்மை தருகிறது. அதேபோல எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் நீங்கள் எப்போதும் அமைதிநிலையில் இருக்க வேண்டும்.இதற்கு உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் சீரமைக்க வேண்டும்.நல்ல வாழ்க்கை முறையையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.உங்கள் எண்ண ஓட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும்.நீங்கள் எதை சிந்திக்கிறீர்கள், எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் உற்று கவனிக்க வேண்டும்.இதன்மூலம்,உங்கள் தற்போதைய நிலை என்ன,
எதை சரிசெய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்களே உணர்வீர்கள்.அன்பின் அடிப்படையில் சில பரிசோதனைகளை நீங்கள் மேற்கொள்ளும்போது அதன் விளைவாக
அன்பின் அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.

அகங்காரமோ எதிர்பார்ப்போ இல்லாமல் உதவுவது,ஒருவரை முழு மனதோடு மன்னிப்பது, முன்னர் வெறுத்த ஒருவரிடம் நல்லெண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது,என்பவையெல்லாம் அத்தகைய பரிசோதனைகள். இதில் எங்கெங்கே எவிதம் உணர்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை நீங்கள் தகவமைத்துக் கொள்ளலாம். வெளிச்சூழல்களால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால்,உங்கல் மகிழ்ச்சி நிபந்தனைகளுக்கு உட்பட்டிருப்பதாகப் பொருள்.இந்த வெளிச்சூழல்களின் அடுக்குகள் உங்கள் மனதைத் தொந்தரவுக்கு உட்படுத்திக் கொண்டேயிருக்கும்.அன்பும் மகிழ்ச்சியும் விதைகளாய் விழுந்து வளர்ந்து வர பண்பட்ட நிலமாய் மனதை அமைப்பது முக்கியம்.

இது குறித்து பின்னர் இன்னும் விரிவாகப் பேசலாம்.

No comments: