Thursday 17 October 2013

குருவாரம் குருவார்த்தை - 46

நீங்கள் எத்தனையோ ஆன்மீக விஷயங்களை விளக்குகிறீர்கள்.படிப்பதற்கு நன்றாக இருக்கிறது.ஆனால் இந்த ஆன்மீகத் தெளிவு நடைமுறையில் சாத்தியமா என்கிற கேள்வியும் கூடவே வருகிறது.ஆன்மீகம் குறித்து கொஞ்சமாவது புரிந்து கொள்ள வசதியாக சில நடைமுறைப் பயிற்சிகளைத் தருவீர்களா?அப்படித் தந்தால் ஆன்மீகத்தை நாங்களும் சுவைத்துப் பார்ப்போமே?





ஆன்மீகம் என்பது மிகவும் சிரமமான விஷயம் என்பது போல் ஒரு தோற்றம் உங்களில் பலருக்கும் இருக்கிறது.உண்மையில் ஆன்மீகம்தான் இருப்பதிலேயே எளிமையான விஷயம்.இந்த உண்மையை நீங்கள் உணர வேண்டுமானால் ஆன்மீகத்தில் வியாக்யானங்களை விட நேரடி   அனுபவங்கள் உங்களுக்கு அவசியம்.ஆனால் பலர் அந்த அனுபவத்தைப் பெறத் தயங்குகிற போதுதான் வியாக்யானங்களும் விளக்கங்களும் தர வேண்டியதாய் இருக்கிறது.
உடல் மனம் கர்மவினை ஆகிய மூன்றுமே முக்கியமான அம்சங்கள்.இவற்றில்,உடலில் ஏதும் குறைகள் இருந்தால் அது மனதின் செயல்திறனையும் பாதிக்கிறது.அதேபோல மனதில் இருக்கும் அழுத்தம்,பதட்டம் போன்ற அம்சங்கள் உடல் நோய்களாகவும் வெளிப்படக்கூடும்.இவற்றுக்கு கர்மவினை துணை புரிகிறது.
 
 
நாள் முழுவதும் உங்களை செயல்துடிப்போடும் உற்சாகத்தோடும் நேர்மறை எண்ணங்களோடும் இயங்கத் தூண்டும் சில ஆரம்பப் பயிற்சிகள் உண்டு.ஆனால் இந்தத் தன்மையைத் தொடர்வதற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த எளிய பயிற்சிகளை விடாமல் செய்வதுதான் அது.தினமும் பயிற்சியை மேற்கொள்ளும்போது,அதன் விளைவாக நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள். பயிற்சியை செய்யாமல் விட்டால் மீண்டும் பழைய நிலைக்கே வருகிறீர்கள்.எனவே விடாமல் செய்வதுதான் முக்கியம்.


தாங்கள் சுவாசிக்கிறோம் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரியும்.ஆனால் சுவாசம் பற்றிய விழிப்புணர்வு மிகச் சிலருக்குதான் இருக்கிறது.எனவே மிக எளிய பயிற்சிகளில் நீங்கள் தொடங்கலாம். உதாரணமாக தினமும் அரைமணிநேரம் மூச்சை உள்ளே இழுப்பதையும் வெளியே விடுவதையும் முழு விழிப்புணர்வுடன் நீங்கள் உற்று கவனிக்கலாம்.நாசி வழி உள்நுழையும் காற்று உங்கள் நுரையீரல்களை அடையும்வரையிலான பயணத்தில் நீங்கள் பங்கேர்கலாம்.அப்போது உங்கள் இருதயத்திற்கு என்ன நேர்கிறது, நுரையீரல்களுக்கு என்ன நேர்கிறது என்பதையெல்லாம்
உற்று கவனிப்பதன் மூலமே உணரலாம்.இதன்மூலம் உங்கள் உள்ளிருக்கும் சக்தியை மட்டுமின்றி சுவாசத்தின் மூலம் நீங்கள் பெறும் சக்தியையும் உணர முடியும்.
அதேபோல எங்கேனும் அமைதியாக அமர்ந்து சில மந்திரங்களை உச்சரிக்கலாம். திரும்பத் திரும்ப ஜபிக்கும்போதே உள்ளே ஒருவித அமைதி படிவதை நீங்கள் உணர்வீர்கள். மந்திரம் உங்கள் எதிர்மறை உனர்வை சீர் செய்கிறது. மந்திரங்களத் தொடர்ந்து உச்சரிப்பது உங்கள் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. மிகச்சில நட்களிலேயே உங்கள் வாழ்க்கைமுறைகளிலும்,பழக்கங்களிலும் மாற்றங்களை உணர்வீர்கள்.வாழ்க்கை குறித்த உங்கள் அடிப்படை புரிதலே பல விதங்களிலும் மேம்படும்.

 
இந்த சின்னச்சின்ன பயிற்சிகளுக்கே உங்களிடம்  நல்ல  தாக்கம் ஏற்படுமென்றால் ஆன்மீகத்தின் சாரம் எவ்வளவு அற்புதமானது என்பது உங்களுக்குப் புரியத் தொடங்கும்.ஆன்மீகத்தின் சுவையை உணர வேண்டுமென்று கேட்டீர்கள்.ஆனால் இந்த சிறிய முயற்சிகள் உங்கள் ஆர்வத்தைக் கூட்டி ஆன்மீகத்தின் ஆனந்தத்தை உணரத் தூண்டும்.


1 comment:

meenakshi T.P. said...

THE technique of watching the breath
really helps one see the truth about
the Existence.IT MAKES one understand
the being better.But many don't have the patience even to listen to a person talking about Breath watching.