Thursday 28 November 2013

குருவாரம் குருவார்த்தை​-52

ஒருபுறம் பார்த்தால் புனிதத் தலங்களுக்கு யாத்திரை போகவே புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். இன்னொரு புறம் பார்த்தால் அந்த புனிதத் தலங்களில் பலர் வியாபார நோக்கிலும் வஞ்சக நோக்கிலும் வருபவர்களை ஏமாற்றுகிறார்கள். இன்னும் சிலர் ஒரு சிறந்த குருவின் அருகே இருந்தாலும் அவரின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள். அப்படியென்றால் தகுதியில்லாதவர்கள் தகுதிக்கும் மீறிய பெருமைகளை அடைகிறார்களா ?
 
 
 

இது பற்றி ஒரு சிந்தனை.ஒரு பிறவியில் மனிதர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கேற்ப,அடுத்த பிறவியில் அவர்கள் பிறக்கக்கூடிய இடம்,குடும்பம்,வாழ்க்கைமுறை, போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றன.இது பொதுவான கண்ணோட்டம். 
 
 
பொதுவாகப் பார்த்தால் நீங்கள் இப்போது செய்கிற செயல் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் செய்த ஒரு செயல் உங்களின் இன்றைய நிலையைத் தீர்மானிக்கிறது.அதேபோல ஐம்பது அல்லது நூறாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் முற்பிறவியில் ஒன்றை செய்திருந்தால் இந்தப் பிறவியில் அதன் பலன்  உங்களுக்குக் கிடைக்கிறது.
 
 
ஒருவர் ஒரு பிறவியில் போதிய அள்வு ஆன்மத் தூய்மை பெற்று ஒருவகை ஞானத்துடன் இறக்கிறார் என்றால் அந்த ஞானம் அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. அதேபோல ஒருவர் அறியாமையில் ஒரு பிறவியைக் கழிக்கிறார் என்றால் அடுத்த பிறவியிலும் அந்த அறியாமை தொடர்கிறது.அவர் பல நல்ல காரியங்களையும் செய்து அறியாமையிலும் இருந்திருந்தார் என்றால் அடுத்த பிறவியில் இந்த இரண்டு அம்சங்களுமே அவரைப் பற்றுகின்றன. 
 
 
அடுத்த பிறவியில்நல்ல குடும்பத்தில் நல்ல சூழலில் பிறக்கிறார்.அதுபோல் புனிதமான தலங்களில் பிறக்கிறார்.அப்படி பிறந்தவர் அப்படியோர் இடத்தில் பிறந்திருக்கிறோம் என்கிற விழிப்புணர்வே இல்லாமல்  நடந்து கொள்ளலாம்.ஆனாலும் அப்படியோர் இடத்தில் பிறந்ததாலேயே அதன் பலாபலன்களுக்கும் நல்லதிர்வுகளுக்கும் அவர் பாத்திரராகிறார்.சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சங்கீதம் கேட்பவர்களுக்குக் கூட அது அமைதியைத் தருகிறதல்லவா! அதுபோலத்தான் இதுவும்.
 
அத்தகைய மனிதர்கள், ஒரு கோயிலிலேயே இருக்க நேரலாம். ஒரு குருவின் அருகேயே இருந்தும் அவரின் அருமை தெரியாமல் இருக்கலாம்.அவருக்கே தெரியாமல் வாழ்வில் அவர் தேடும் வளங்களும் பெருமைகளும் அவரை வந்தடையலாம்.
 
நீங்கள் விதைத்த விதைகளுக்கேற்ப நற்பலன்கள் உங்களை வந்தடைகிறது. அந்த நற்பலன்களை தெளிவுடன் அடையாளம் காண்கிறீர்களா,அல்லது அவை வந்ததே தெரியாமல் இருக்கிறீர்களா என்பதெல்லாம் உங்களைப் பொறுத்தது 

No comments: