Thursday 29 November 2012

குருவாரம் குருவார்த்தை - 4

சராசரி மனிதர்களானாலும் சரி, சாதனையாளர்களானாலும் சரி, வெவ்வேறு சூழ்நிலைகளில் வெறுமையாக உணர்கிறார்களே, இது ஏன்?

சந்தோஷத்தின் காரணமாகவும் வெறுமையுணர்ச்சி தோன்றலாம். துக்கத்தின் காரணமாகவும் வெறுமையுணர்ச்சி தோன்றலாம். காரணமே இல்லாமலும் வெறுமை உணர்ச்சி தோன்றலாம். இதற்கு அடிப்படை, குறுகிய கால நோக்கங்கள் சந்தோஷங்கள் இவற்றை நோக்கி மனம் தன் கவனத்தைக் குவித்திருப்பதுதான். மிகவும் எதிர்பார்த்திருந்த ஒரு சம்பவம் வெற்றியில் முடிந்தாலும் வெறுமையுணர்ச்சி வருகிறது. இவ்வளவுதானா என்ற எண்ணத்தின் விளைவு அது. அந்த சம்பவம் தோல்வியில் முடிந்தாலும் விரக்தி காரணமாய் வெறுமையுணர்ச்சி வருகிறது.




வெறுமையுணர்ச்சி என்பது  உங்கள் வளர்ச்சிக்காக இயற்கை செய்திருக்கும் ஏற்பாடு. நாம் ஏன் பிறந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது  போன்ற கேள்விகள் தோன்றி சுயஆய்வு  செய்வீர்கள். தனிப்பட்ட முறையில் சுய ஆய்வு செய்கிறீர்களோ இல்லையோ இது போன்ற நேரங்களில் உங்களுக்குள் வாழ்க்கை  பற்றிய அடிப்படையான கேள்விகள் தோன்றும்வாழ்வின் உயரிய  பரிமாணங்களை  நோக்கி உங்கள் எண்ணங்கள்  தாமாகவே  திரும்பும். சிலரோ அவசரப்பட்டு இந்த வெற்றிடத்தை வெட்டிப் பேச்சுகளாலும் வேண்டாத பழக்கங்களாலும் பொழுதுபோக்குகளாலும் நிரப்பப் பார்ப்பார்கள். அவர்கள் கையாள்கிற முறையால்தான் நிரந்தரமான மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். 

அடிப்படையில் பார்த்தால் வெறுமையுணர்ச்சி ஒருவகையில் மிகவும் நல்லது. அந்த நிலையில் உள்ளுக்குள் எழும் தீவிரமான கேள்விகள், உங்களை அடுத்த நிலைநோக்கி உந்தித் தள்ளுகிறது. வாழ்க்கை குறித்த அடிப்படைக்கேள்விகளை எழுப்பி விடைகாணத் தூண்டுகிறது. வெறுமையாக உணர்வது உங்களை ஆன்மீகத் தெளிவுக்கு அழைத்துச் செல்கிறதோ இல்லையோ, உங்களை மிக நிச்சயமாய் தூய்மைப்படுத்துகிறது.

எனவே வெறுமையுணர்ச்சி ஏன் வருகிறதென்று ஆராய்வதை விட அந்த உணர்வை எப்படிக்கையாளப் போகிறீர்கள் என்பதே முக்கியம். அதனை ஆக்கபூர்வமாகக் கையாண்டால் வாழ்வின் அடுத்த படிநிலை நோக்கிச் செல்வீர்கள். இதுமட்டும் வாழ்க்கையில்லை, இன்னும் இருக்கிறது என்ற தெளிவைப் பெற்று உங்கள் சக்தியையும் உற்சாகத்தையும் ஆக்கபூர்வமாய் பயன்படுத்துவீர்கள்.
ஆனால் அந்த வெறுமையுணர்ச்சியை எதிர்மறையாகக் கையாண்டால் மேலும் மேலும் சோர்வடைவீர்கள். வாழ்வின் எந்தச் சூழ்நிலையையும் மனிதன் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர தனக்குத்தானே தீமைசெய்து கொள்ளும் விதமாகக் கையாளக் கூடாது. விவேகமாகக் கையாள வேண்டிய உணர்ச்சிகளில் வெறுமையுணர்ச்சியும் ஒன்று. 

No comments: