Thursday 14 February 2013

குருவாரம் குருவார்த்தை-15

நம்முடைய மரபில் எத்தனையோ யோகமுறைகள் குறிப்பிடப்பட்டும்
பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. ராஜயோகா க்ரியா யோகா போன்றவை அவற்றில் மிகவும் பிரபலமானவை. இவற்றில் மந்திர யோகாவை எவ்விதமாக வகைப்படுத்துவீர்கள்?

எந்தவிதமான யோகமுறையாய் இருந்தாலும் அதன் முக்கிய நோக்கம், ஓர் ஆத்ம சாதகரின் ஆன்மீக உந்துதலை மேம்படுத்துவதுதான். ராஜயோகம் என்பது வரையறுக்கப்பட்ட ஆத்ம சாதனை. எட்டு அங்கங்களாய் வகைப்படுத்தப்பட்டு அஷ்டாங்க யோகம் என அழைக்கப்படுகிறது. 



க்ரியா யோகாவில் சுவாசம் மற்றும் ஓசையின் சங்கமம் உள்நிலைத் தெளிவுக்குப் பாதை வகுக்கிறது . ஆசனம் மற்றும் பிராணாயாமத்தில் ஒருவர் நல்ல முதிர்ச்சியடையும் போது அவருக்கு க்ரியா யோகாவில் தீட்சை தரப்படுகிறது. தந்திர மார்க்கம் உட்பட க்ரியா யோகாவில் எத்தனையோ வகைகள் உள்ளன.க்ரியா என்ற சொல்லுக்கு செயல் என்று பொருள்.விழிப்பு நிலையுடன் கூடிய பல செயல்கள் க்ரியா யோகாவின் அங்கங்களாய் உள்ளன.

மந்திரயோகத்தைப் பொறுத்தவரை,மந்திர தீட்சை வழங்கப்படுகிறது. துரித கதியில்உள்முகமாகவோ வெளிமுகமாகவோ மந்திரம் உச்சாடனம் செய்யப்படும்போது அதிர்வுகள் உண்டாகின்றன. இந்த மந்திரங்கள் உள்நிலையில் தூய்மை உண்டாக்குகின்றன. ஓர் ஆத்மசாதகரின் உள்நிலைப் பயணத்தில் அபரிமிதமான தெளிவையும் தூய்மையையும் உண்டாக்கும் கருவிகளாக மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாகப் பார்த்தால் மந்திரங்களை மனிதர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவும் பயன்படுத்த முடியும். மறைந்த மூதாதையர்களுக்கான சில கர்ம நியமங்களை நிறைவேற்றவும், அவரவர்களின் வழக்கமான ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் மந்திரங்கள் பயன்படுகின்றன. வேள்விகள் நிகழ்த்தும் போது வேள்விகளில் எழுந்தருளச் செய்யப்படும் தெய்வங்களுக்கான       சங்கல்பங்களை     சமர்ப்பிக்க     மந்திரங்கள்
பயன்படுகின்றன. மேல்நிலைகளிலான சக்திகளை எழுந்தருளச்செய்ய அக்னி ஓர் ஊடகமாக இருப்பதைப் போலவே மந்திரங்களும் அவற்றுக்கான ஊடகங்களாய் அமைகின்றன.

குருவிடமிருந்து ஒரு மந்திரம் தீக்ஷையாகப் பெறப்படும்போது அது தனித்தன்மை மிக்க அதிர்வுகளுடன் திகழ்கிறது.ஏனெனில் அம்மந்திரம் ஒரு குருவால் விதைக்கப்பட்டு தன் உச்சபட்சஅதிர்வுகளுடன் சாதகருக்குள் செயல்படுகிறது.வெளிமனதில் முழு விழிப்புணர்வுடன் செயல்படுவது மட்டுமின்றி, உள்மனதில் இருக்கும் வெளித்தெரியாத தடைகளையும் அகற்றி தூய்மை செய்யும் சக்தி இத்தகைய மந்திரங்களுக்கு உண்டு.

ஒரு மந்திரத்தை பெறுகிற விதத்திலும் பிரயோகிக்கும் விதத்திலும் குருவின்
பாரம்பரியத்துக்கேற்ப சில முறைகளும் பயிற்சிகளும் தரப்படுகின்றன. எனவே மந்திர யோகத்தைப் பொறுத்தவரை  மந்திரங்கள் உபதேசிக்கப்படுகின்றன. அவற்றைப் பிரயோகம் செய்யும்போது அவை உடலிலுள்ள சக்திநிலைகளைத் தூண்டுகின்றன. சக்திநிலைகள் தூண்டப்படும்போது    உள்நிலையில்   தூய்மையும்   தெளிவும்    பிறக்கின்றன.
இந்நிலை  ஸ்திரமடையும்  பொழுது,  மனமானது  ஐம்புலன்களையும்   கடந்து
தியானநிலையை உணர்கிறது.இதன்வழியாக ஆத்மசாதகர் படிப்படியாக தியானநிலைக்கு வழிநடத்தப்பட்டு அந்நிலையிலேயே லயித்திருக்க முடிகிறது.

No comments: