Thursday 6 December 2012

குருவாரம் குருவார்த்தை-5


மனிதர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நேரங்களில் மிகவும் திணறுகிறார்கள். எவ்வளவோ  யோசித்தாலும் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.  இது ஏன்?

     உங்கள் தேடல்களின் தன்மையைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.தேடல்களை ஆழ்ந்த தேடல் என்றும் அத்தியாவசியத் தேடல் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்.அத்தியாவசியத் தேடல் என்பது உங்கள் உலக வாழ்வுக்கு அவசியமான தேடல்களைக் குறிக்கும். இந்தத் தேடல் முடிவில்லாமல் நீளும்போது அந்தத் தேடலே ஒரு சுமையாக மாறுவதால் மனம் எடுக்கும் முடிவுகள் தெளிவின்றிப் போகின்றன. இத்தகைய சூழல்களில் சிலசமயம் உங்கள் மனம் சொல்வது ஒன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் தீர்மானம் வேறொன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த நேரங்களில் உங்கள் தேடல்கள் உங்கள் முடிவுகள் இரண்டுமே மிகவும் குறுகியவையாய் ஆகிவிடவும் வாய்ப்புண்டு.

உள்ளுணர்வு ஒன்றைச் சொல்கிறது,உங்கள் முடிவு வேறொன்றாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? உங்கள் உள்ளுணர்வையும் நீங்கள் எடுக்கும் முடிவையும் இணைக்கும் சக்திமிக்க கருவி ஒன்று தேவைப்படுகிறது என்று அர்த்தம்.உங்கள் உள்தன்மையுடன் உங்களை இணைக்கும் கருவி செயல்படும் நிலையில் இருப்பது, அதைவிட முக்கியம்.  அந்தக் கருவி யோகாவாக இருக்கலாம், தியானமாக இருக்கலாம், பிரார்த்தனையாக இருக்கலாம்.

மனமொன்றி ஓவியம் தீட்டுவது உங்கள் உள்தன்மையுடன் உங்கள இணைத்தால் அதுகூட சக்திமிக்க கருவிதான்.

பிரார்த்தனையே அற்புதமான கலைதான். சிலர்  அதனைத் தங்கள்   தேவைகளை  நிறைவேற்ற எவற்றையோ கேட்கிற விஷயமாகக் கருதுகிறார்கள். பிரார்த்தனையில் அதுவும் ஒர் அங்கமாக இருக்கலாம். ஆனால், பிரார்த்தனை என்பது கடவுளும் மனிதனும் கலந்துரையாடும் அழகானதொரு மொழி. அது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. குழந்தையின்  மொழியற்ற  மொழியை அன்னை புரிந்து கொள்வது போலத்தான்  இதுவும். தெளிவான அனுமானமும் உண்மையான பரிவும் சங்கமிப்பதன் விளைவு இது நீங்கள்  எடுக்கும் முடிவில் உறுதியாக இருந்தாலும் அவற்றை மேலும் சீர்ப்படுத்தவும் தேவைக்கேற்ப மாற்றவும் இடம் கொடுக்கலாம். முடிவடுப்பதில் குழப்பம் ஏற்படும் தருணங்கள் மிகவும் சுவாரசியமானவை.மனமும் உள்ளுணர்வும் ஒன்றுடன் ஒன்று சரியாகத் தொடர்பு கொண்டால் பல அதிசயங்கள் நிகழ்வதை உணர்வீர்கள்.

No comments: