Thursday 21 March 2013

குருவாரம் குருவார்த்தை-20




நாகாபாபாக்கள் நிர்வாணக் கோலத்தில் இருக்கிறார்கள்.நிர்வாணத்துக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?


ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர் நிர்வாணக் கோலத்தில் இருப்பது புதிதல்ல. திகம்பரர்கள், நாகா பாபாக்கள் ஒருசிலசித்தர்கள், சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற ஞானிகள் நிர்வாணமாகவே இருந்து வந்துள்ளனர்.
நிர்வாணம் என்பது யாருக்கு சாத்தியமென்றால், "நான்' என்னும் அடையாளத்தை விட்டவர்களுக்கு சாத்தியம்.ஒரு மனிதன் தன்அடையாளங்கள் குறித்தே மிகவும் கவனமாக இருக்கிறான். தன் தோற்றம்,தன் நிறம் போன்றவற்றின் முக்கிய அங்கமாக ஆடையும் திகழ்கிறது.ஆள்பாதி ஆடைபாதி என்று நம்பப்படுகிற சமூகத்தில் ஆடையை வைத்தே ஒரு மனிதனின் தகுதியும் மனநிலையும் தீர்மானிக்கப்படுகிறது.மனிதன் தன் வெளிப்புறத்தை ஆடைகளால் மறைக்கிறான்.  உள்நிலையை அகங்காரத்தால் மறைக்கிறான்.

இப்படி தன்னைக் குறித்த அடையாளங்களை மனிதன் சேகரித்துக் கொண்டே போகிற நிலையில் தனைப் பற்றிய அடையாளங்களை ஒரு மனிதன் கடந்ததன் குறியீடே நிர்வாணம்.நிர்வாண நிலையில் இருப்பவர்கள் அனைவருமே அந்த நிலையை  அடைந்தவர்களா என்ற கேள்வி எழலாம். சிலர் அந்த நிலையை அடைந்திருப்பார்கள். சிலர் அந்நிலையை அடைவதற்கான படிநிலைகளில் இருப்பார்கள்.

ஞானிகளின் நிர்வாணம் ஒரு குழந்தையின் நிர்வாணத்தைப் போன்றது. எவ்வித விகல்பமும் இல்லாதது. இப்படி ஒருவரோ ஒரு குழுவினரோ இருக்கும்போது அது சமூகத்தில் வியப்பை ஏற்படுத்துவது இயற்கை. இதில் முக்கியமானது என்னவென்றால் தாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாதவர்களின் அத்தகைய இருப்பு மற்றவர்களை பாதிக்காது.அந்தக் குழந்தைத்தனம் அறியாமை சார்ந்ததல்ல. வாழ்வின் சுகதுக்கங்கள்,இன்பதுன்பங்கள், மான அவமானங்கள் என்று வெவ்வேறு எல்லைகளைக்  கடந்ததால் வருகிற குழந்தைத்தனம்.ஆன்மீகத்தில் வருகிற ஆனந்தம் பலரிடமிருந்தும் பலவிதமாக வெளிப்படும். சிலரிடம் ஞானமாகவெளிப்படும். சிலரிடம் கருணையாக வெளிப்படும். சிலரிடம் குழந்தைத்தனமாக வெளிப்படும்.

முக்தியடைவதை மஹா நிர்வாணம் என்கிறோம்.சிலர் தங்கள் உள்நிலை நிர்வாணத்தின் வெளிப்பாடாக புறத்தோற்றத்தில் நிர்வாணமாக இருக்கிறார்கள். சிலரோ புறத்தோற்றத்தின் நிர்வாணத்தில் தொடங்கிஉள்நிலை நிர்வாணத்தை நோக்கி நகர்கிறார்கள்.

No comments: